ஆகாஷ் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் பயனர் மதிப்பீட்டு சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்களை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் தயாரித்து சோதனை செய்து வருகிறது. பலகட்ட வெற்றிகர பரிசோதனைக்குப்பின் இந்த ஆயுதங்கள் படையில் சேர்க்கப்பட்டு வரும் நிலையில், 5 மாதங்களுக்கு முன்பு முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் சோதனை லடாக்கில் சுமார் 15 ஆயிரம் அடி உயரத்தில் மேற்கொள்ளப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, ஒடிசாவின் சந்தாபூரில், ஆகாஷ் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் பயனர் மதிப்பீட்டு சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆகாஷ் அடுத்த தலைமுறை ஏவுகணை பல இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கும் திறனை நிரூபித்தது என்றும், குறைந்த உயரம் மற்றும் நீண்ட தூர உயர இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தது எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆகாஷ் அடுத்த தலைமுறை ஏவுகணை உள்நாட்டு ரேடியோ அதிர்வெண் மற்றும் உள்நாட்டு ராடார்கள் அமைப்புகளை கொண்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்திய விமானப்படையில் ஆகாஷ் அடுத்த தலைமுறை ஏவுகணை விரைவில் சேர்க்கப்படும் எனவும் ராணுவ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
















