பைபிளில் உள்ள கருத்தும், திமுகவின் கொள்கையும் ஒன்று என்ற முதலமைச்சரின் கருத்தை இயேசுவே ஒப்புக்கொள்ளமாட்டார் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ஸ்ரீஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் ஆறு நாள் ஆன்மீக சுற்றுலா பயணமாக காசிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆயிரத்து 300 பேர் காசிக்கு புறப்பட்ட சிறப்பு ரயிலை பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், பெயிலில் இருக்க வேண்டிய திமுக அமைச்சர்கள் ஆன்மிகத்தை எதிர்த்து பேசுகின்றனர் என்றும், ஆன்மிகத்தை நம்பியவர்கள் ரயிலில் சென்று கொண்டிருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் நிலவும் போலி மதச்சார்பின்மையை உடைத்து எறிய வேண்டும் என்றும், சமூக நல்லிணக்கத்தின் அடையாளம் கிறிஸ்துமஸ் என்று முதலமைச்சர் பேசுவதாகவும் குறிப்பிட்டார். மேலும், பைபிளின் கருத்தும் திமுகவின் கொள்கையும் ஒன்று என்ற முதலமைச்சரின் கருத்தை இயேசுவே ஒப்புக்கொள்ளமாட்டார் எனவும் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்தார்.
















