சபரிமலையில் புனிதமான பதினெட்டாம் படியின் சில பகுதிகள் சேதப்படுத்தப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் குற்றம்சாட்டி உளளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவார பாலகர் சிலை தங்கத் தகடுகள் மாயமான விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் பலர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர், சபரிமலையிலிருந்து எடுத்து செல்லப்பட்ட 4 பஞ்சலோக சிலைகள், சர்வதேச குற்றவியல் கும்பலால் விற்பனை செய்யப்பட்ட தகவல் விசாரணையில் வெளிவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சபரிமலையில் நடந்த கொள்ளை நான்கரை கிலோ தங்கத்துடன் நின்றுவிடவில்லை என கூறியுள்ள ராஜீவ் சந்திரசேகர், கடந்த 2015-ஆம் ஆண்டு புனிதமான பதினெட்டாம் படியின் சில பகுதிகள் சேதப்படுத்தப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
சபரிமலையில் நடந்த முறைகேடு உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களுக்கு செய்யப்பட்ட துரோகம் என வேதனை கூறியுள்ள ராஜீவ் சந்திரசேகர், ஐயப்ப பக்தர்களுக்கு நீதி கிடைப்பதை பாஜக உறுதி செய்யும் எனவும் உறுதி தெரிவித்துள்ளார்.
















