ஹைனான் என்ற பெரிய தீவை ‘வரி இல்லாத வர்த்தக மண்டலம்’ ஆக மாற்றியுள்ள சீனா, உலக முதலீடுகளை ஈர்த்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்…
உலகம் முழுவதும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் வர்த்தக தடைகள் மற்றும் இறக்குமதி வரிகளை உயர்த்துவதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு தங்கள் சந்தைகளை மூடி வருகின்றன. ஆனால் சீனாவோ அதற்கு முற்றிலும் எதிரான பாதையை தேர்வு செய்து, உலக முதலீடுகளை ஈர்க்கும் ஒரு துணிச்சலான முடிவை கையிலெடுத்துள்ளது. அதன்படி தென் சீன கடற்பகுதியில் உள்ள ஹைனான் தீவை, முழுமையான ஒரு சுதந்திர வர்த்தக துறைமுகமாக மாற்றியுள்ள சீன அரசு, உலக வர்த்தகத்தில் புதிய மாற்றத்தை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.
சிங்கப்பூரை விட 50 மடங்கு பெரிய பரப்பளவு கொண்ட இந்த ஹைனான் தீவு, தற்போது, ஒரே சுங்க வரி அமைப்புடன் இயங்கும் உலகின் மிகப்பெரிய “Free Trade Port” ஆக உருவெடுத்து வருகிறது. இம்மாதம் தொடங்கப்பட்டுள்ள புதிய சிறப்பு சுங்க நடவடிக்கைகள் மூலம், சுமார் 74 சதவீத பொருட்களுக்கு முழுமையான வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இது வெறும் 21 சதவீதமாக மட்டுமே இருந்தது. இதன் மூலம் சர்வதேச நிறுவனங்கள் குறைந்த செலவில் தங்கள் பொருட்களை ஹைனானில் இறக்குமதி செய்ய முடியும். அங்கு குறைந்தபட்சமாக 30 சதவீதம் வரை மதிப்பு சேர்க்கை செய்யும் பட்சத்தில், அவற்றை சீனாவின் பிரதான நகரங்களுக்கு வரிவிலக்குடன் அனுப்ப முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஹைனான் தீவை வெறும் பொருட்களை இடமாற்றி அனுப்பும் பகுதியாக மட்டுமல்லாமல், அங்கு உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலி செயல்பாடுகளை உருவாக்கும் நோக்கிலும் சீனா செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஹைனான் தீவில் பதிவு செய்து செயல்படும் தகுதியான நிறுவனங்களுக்கு, வெறும் 15 சதவீத கார்ப்பரேட் வரிகளே விதிக்கப்படுகின்றன. இது சீனாவின் பிரதான நகரங்களில் விதிக்கப்படும் 25 சதவீத வரியையும், ஹாங்காங்கில் விதிக்கப்படும் 16.5 சதவீத வரியையும் விட குறைவு என்பதால், ஹைனானில் பதிவு செய்வதற்கு நிறுவனங்கள் நீயா, நானா என போட்டிபோடும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில், திறமையான தொழிலாளர்களுக்கு வருமான வரியும் அதிகபட்சமாக 15 சதவீதமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் சீனாவின் பிரதான நகரங்களின் 45 சதவீத வரியை விட மிக மிக குறைவு. இதற்கெல்லாம் மேலாக பிறவற்றை ஒப்பிடுகையில் ஹைனானில் சுங்க நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இயந்திர மற்றும் மின் சாதனங்களுக்கு இருந்த உரிமம் தொடர்பான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. பல்வேறு காரணங்களுக்காக விதிக்கப்பட்ட நிர்வாக தடைகளும் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் ஹைனானில் எல்லை தாண்டிய வர்த்தகம் வேகமாகவும், எளிதாகவும் நடைபெற வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சீனாவின் இந்த நடவடிக்கைகள் முதலீட்டாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சீனா மற்றும் ஹாங்காங் பங்கு சந்தைகளின் பங்குகள் கணிசமாக உயர்ந்துள்ளன. சிமென்ஸ் எனர்ஜி போன்ற பெரிய நிறுவனங்கள் ஏற்கனவே ஹைனானில் தங்கள் முதலீடுகளை தொடங்கிவிட்ட நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ஹைனான் சுமார் 14.6 பில்லியன் டாலர் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளது. இந்நிலையில், ஹைனான் “Free Trade Port”-ஐ சீனாவின் புதிய உலகளாவிய திறந்தநிலை வர்த்தக நுழைவுவாயிலாக மாற்ற வேண்டும் என அந்நாட்டு துணை பிரதமர் ஹே லிஃபெங் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நேரடி முதலீடுகளில் ஏற்பட்ட சரிவை மாற்றி 2026-ம் ஆண்டில், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க இந்த திட்டம் சீன அரசுக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. உலகம் முழுவதும் வர்த்தக கட்டுப்பாடுகள் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில், ஹைனான் தீவை சுதந்திர வர்த்தக மண்டலமாக மாற்றியுள்ள சீனாவின் இந்த முயற்சி 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய வர்த்தக தாராளமயமாக்கல் முயற்சிகளுள் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
















