புதுச்சேரியில் அரசு நிலத்தில் லெனின் சிலை வைக்கப்பட்டதற்கு இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நெல்லித்தோப்பு பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 5 அடி உயரத்தில் லெனின் சிலை வைக்கப்பட்டது. அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலையை அகற்றக்கோரி இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் லெனின் சிலை அருகே விநாயகர் சிலையை வைத்த அவர்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது, இதனையறிந்து அங்கு சென்ற போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தை கலைத்தனர்.
பின்னர் பாதுகாப்பு கருதி லெனின் சிலையையும் போலீசார் தார்ப்பாய் கொண்டு மூடினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
















