டெல்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தார்.
கடந்த சில ஆண்டுகளாக, கிறிஸ்தவ சமூகத்துடன் தொடர்புடைய நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி தொடர்ந்து பங்கேற்று வருகிறார். கடந்த 2023ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள சேக்ரட் ஹார்ட் தேவாலயத்தில் நடந்த ஈஸ்டர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அதே ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று கல்யாண் மார்க் இல்லத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். 2024ஆம் ஆண்டு அமைச்சர் ஜார்ஜ் குரியனின் இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் இரவு விருந்திலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டெல்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தார்.
முன்னதாக, கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், இயேசு கிறிஸ்துவின் போதனைகள் நமது சமூகத்தில் நல்லிணக்கத்தையும், நல்லெண்ணெத்தையும் ஊக்குவிக்கட்டும் என தெரிவித்துள்ளார். மேலும், அனைவருக்கும் அமைதி, கருணை மற்றும் நம்பிக்கை நிறைந்த மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
















