அமெரிக்காவின் அதீத சுங்க வரிகளால் கடும் அழுத்தங்களை எதிர்கொண்டு வரும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, நியூசிலாந்து ஒரு புதிய நம்பகமான மாற்று சந்தையாக உருவெடுத்து வருகிறது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்…
அமெரிக்காவின் அதீத சுங்க வரிகள் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கடும் அழுத்தத்தை உருவாக்கி வருகின்றன. குறிப்பாக ஆடைகள், உணவு பதப்படுத்தல், ரசாயனங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற துறைகளில், அமெரிக்க சந்தையை பெரிதும் நம்பியிருந்த நிறுவனங்களின் போட்டித் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்த சுங்கச் செலவுகள் காரணமாக இந்தியப் பொருட்களின் விலை உயர்ந்து, சீனா, வியட்நாம், மெக்சிகோ போன்ற நாடுகளின் பொருட்களுடன் போட்டியிடுவது கடினமாகியுள்ளது. இதனால் ஆர்டர்கள் குறைதல், லாப விகிதங்கள் சுருங்குதல், சில நிறுவனங்களில் உற்பத்தி அளவு குறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இதனால் அமெரிக்க சந்தை மீதான சார்பை குறைத்து, மாற்றுச் சந்தைகளை தேடும் கட்டாயத்திற்கு இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலையில், இந்திய ஏற்றுமதிகளுக்கு நியூசிலாந்து ஒரு முக்கிய மாற்றுச் சந்தையாக அமையலாம் என்று வர்த்தக தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அமெரிக்காவுக்கு இந்தியா அனுப்பும் பொருட்களையும், இந்தியாவைத் தவிர பிற நாடுகளிலிருந்து நியூசிலாந்து இறக்குமதி செய்யும் பூர்த்தியடையாத தேவையையும் ஒப்பிட்டுப் பார்த்ததில், சுமார் 12.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களில் ஒத்திசைவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதில், உடனடியாக நியூசிலாந்து சந்தையில் விற்பனை செய்யக்கூடிய இந்திய பொருட்களின் மதிப்பு மட்டும், சுமார் 3.3 பில்லியன் டாலர் அளவுக்கு இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க சந்தையில் இந்தியாவுக்கு ஏற்கனவே வலுவான ஏற்றுமதி அனுபவம் உள்ள பல பொருள் பிரிவுகளில், நியூசிலாந்து தனது தேவையை இன்னும் பிற நாடுகளிலிருந்து பூர்த்தி செய்து வருகிறது. இந்த இடைவெளியே இந்திய உற்பத்தியாளர்களுக்கு புதிய வாய்ப்பாக மாறியுள்ளது.
குறிப்பாக, உணவு மற்றும் பானங்கள் சார்ந்த பொருட்களில் இந்த வாய்ப்பு அதிகமாக உள்ளது. சர்க்கரை இனிப்புகள், பிஸ்கட், உடனடியாக சமைக்கும் உணவுகள் போன்றவற்றை இந்தியா அமெரிக்காவுக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்கிறது. அதே நேரத்தில், இதே பொருட்களை நியூசிலாந்து இந்தியாவைத் தவிர பிற நாடுகளிலிருந்து கோடிக்கணக்கான டாலர் மதிப்பில் இறக்குமதி செய்து வருகிறது.
இதேபோல், தக்காளி சாஸ், கலப்பு சாஸ்கள், புரதச் சேர்மங்கள் உள்ளிட்ட பல பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களிலும், இந்திய ஏற்றுமதிக்கு வாய்ப்பு அதிகரித்துள்ளது. அழகு சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களும் இதில் மற்றொரு முக்கிய பிரிவாக பார்க்கப்படுகின்றன.
வாசனை திரவியங்கள், தோல் மற்றும் முடி பராமரிப்பு, வாய்ச் சுத்தம் தொடர்பான பொருட்களை இந்தியா ஏற்கனவே அமெரிக்காவுக்கு அதிக அளவில் அனுப்பி வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் பங்கு மிக குறைவாக உள்ள நியூசிலாந்து சந்தையில், இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இதுமட்டுமின்றி பிளாஸ்டிக் மற்றும் பேக்கேஜிங் பொருட்கள், துணிகள், ஆடைகள், காலணிகள் ஆகியவையும்ம், நியூசிலாந்துக்கான ஏற்றுமதிக்கு ஏற்ற துறைகளாக கருதப்படுகின்றன. டி-ஷர்ட், நைட்வேர், பெண்களுக்கான ஆடைகள், உள்ளாடைகள், படுக்கை விரிப்புகள் போன்றவற்றில் இந்தியா அமெரிக்காவுக்கு பெரிய அளவில் ஏற்றுமதி செய்கிறது. இதே பொருட்களுக்கு நியூசிலாந்திலும் கணிசமான தேவை உள்ளது.
அதேபோல, தொழில்துறை பொருட்களில் ரசாயனங்கள், இயந்திரங்கள், மருத்துவ உபகரணங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. பம்புகள், வடிகட்டி அமைப்புகள், பேக்கேஜிங் இயந்திரங்கள், மருத்துவ மற்றும் அறுவைச் சிகிச்சை கருவிகள் போன்றவற்றில் நியூசிலாந்தின் பூர்த்தியடையாத தேவை, இந்தியாவுக்கு உயர்ந்த மதிப்புள்ள ஏற்றுமதி வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
மொத்தத்தில், அமெரிக்க சந்தை சவால்களால் பாதிக்கப்பட்டு வரும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள், நியூசிலாந்தை புதிய சந்தையாக பயன்படுத்தி தேவையான பொருட்களை விற்று தங்கள் வியாபாரத்தை வளர்த்துக்கொள்ள முடியும் என்பதையே இந்த ஆய்வு விரிவாக சுட்டிக்காட்டியுள்ளது.
















