கேலோ இந்தியா திட்டத்தால் கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டு திறன் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஏற்பாட்டில் கடந்த ஒரு மாதமாக கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து 4,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆலாங்கொம்பு எஸ்.எஸ்.வி.எம் பள்ளியில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் எல்.முருகன், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
நிகழ்ச்சியில் பேசிய எல்.முருகன். விளையாட்டில் புதிய அத்தியாயத்தை படைக்க பிரதமர் மேற்கொண்டுள்ள முயற்சியே கேலோ இந்தியா திட்டம் என தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புற விளையாட்டு வீரர்களின் திறமைகள் சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்படும் என்றும் அவர் கூறினார்.
















