உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள லிபியாவின் 6 கிழக்கு பகுதிகளைக் கட்டுப்படுத்தும் லிபிய தேசிய ராணுவத்துக்கு 4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய ராணுவ தளவாடங்களை விற்பதற்கு பாகிஸ்தான் ஒப்பந்தம் செய்துள்ளது. ஐ.நா ஆயுதத் தடையைப் புறக்கணித்துவிட்டு இந்த ஆயுத ஒப்பந்தத்தை பாகிஸ்தான் செய்திருப்பதாகச் சர்ச்சையும் எழுந்துள்ளது. இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் கடாபியின் வீழ்ச்சிக்குப் பிறகு அந்நாட்டின் அரசியல் நிலப்பரப்பு இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கைகளில் சிக்கியது. 2011 ஆம் ஆண்டில் மதச்சார்பற்ற அரசை அப்புறப்படுத்தப் பலவழிகளில் இஸ்லாமிய போராளிகள் அழுத்தம் கொடுத்தனர். அன்றிலிருந்தே லிபியாவில் இஸ்லாமிய மற்றும் மதச்சார்பற்ற போராளிகளுக்கு இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
22 அரபு நாடுகளின் மொத்த சொத்துக்களைத் தன்னகத்தே கொண்டுள்ள லிபியாவில் ஏராளமான எண்ணெய் வளங்கள் உள்ளன. சிறிய மக்கள் தொகை கொண்ட இந்நாடு இரண்டாகப் பிளவு பட்டுள்ளது. திரிப்போலியில் GNA என்ற தேசிய ஒற்றுமை அரசாங்கம் உள்ளது. லிபிய பிரதமர் ஃபயீஸ் அல்-சர்ராஜால் தலைமையிலான அரசை அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகளுடன் துருக்கி , கத்தார் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் ஆதரிக்கின்றன. கிழக்கு லிபியாவை ஜெனரல் கலீஃபா ஹஃப்தார் தலைமையிலான LNA என்னும் லிபிய தேசிய ராணுவம் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இதை ரஷ்யா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் பிரான்ஸ் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் ஆதரிக்கின்றன. லிபியாவின் சட்டபூர்வ அரசாக ஐ.நா.சபையால் GNA அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டாலும், அது சிறிய அளவிலான நிலப் பகுதியில் மட்டுமே தன் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.
இந்நிலையில், முறையற்ற ஆட்சியாளர்களிடமிருந்து நாட்டை விடுவிக்கவும் திரிப்போலி மற்றும் டோப்ருக்கை கைப்பற்றி ஒன்றிணைந்த லிபியாவை உருவாக்கவும் திரிபோலி மீது படையெடுத்து முன்னேறுமாறு தனது இராணுவத்துக்கு ஜெனரல் கலீஃபா ஹஃப்தார் உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சூழலில் தான், லிபிய தேசிய இராணுவத்துக்கு JF-17 பல்துறை போர் விமானங்கள் 16 மற்றும் அடிப்படை விமானி பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும் 12 Super Mushak பயிற்சி விமானங்கள் 12 உள்ளிட்ட 4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய இராணுவ தளவாடங்களை விற்பதற்கு பாகிஸ்தான் ஒப்பந்தம் செய்துள்ளது.
லிபிய தேசிய இராணுவத்தின் துணைத் தளபதி சதாம் கலீஃபா ஹஃப்தாருடன் நடந்த சந்திப்பின் போது, ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீரின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகப் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆயுத விற்பனை ஒப்பந்தம் இது ஆகும். ஆபரேஷன் சிந்தூரில் ஏற்பட்ட தோல்வியை ஒப்புக்கொள்ளாத பாகிஸ்தான் மற்ற நாடுகளுக்குத் தனது ஆயுத ஏற்றுமதியை விரிவுபடுத்துவதன் மூலம் தனது பலத்தை காட்ட முயற்சி செய்கிறது. லிபியா மீது ஐ.நா., சபை விதித்துள்ள நீண்டகால ஆயுதத் தடையை நேரடியாக இந்த ஒப்பந்தம் மீறுவதால் விலக்கு பெற பாகிஸ்தான் விண்ணப்பித்துள்ளதா? என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
லிபிய தேசிய ராணுவம், அரசு சாராத போராளி அமைப்பாக இருப்பதால், அதற்கு ஆயுதங்களை விற்பது சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தும் என்றும் பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
















