ட்ரம்பின் தவறான பொருளாதார நடவடிக்கைகளால் ஏற்கெனவே கடுமையான சிக்கலில் உள்ள அமெரிக்கப் பொருளாதாரம், முழு நாட்டையும் ஒரு பொருளாதார மந்தநிலைக்குள் தள்ளிவிடக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிதுள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலக நாடுகள் மீதான அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வர்த்தகப் போரால் பணவீக்கம் அதிகரிக்கும் என்றும், பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை ஏற்படும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அமெரிக்க பொருளாதார வளர்ச்சி 1.4 சதவீதமாகக் குறையும் என்றும், பணவீக்கம் 3 சதவீதமாக இருக்கும் என்றும் வேலையின்மை 4.5 சதவீதமாக உயரும் என்றும் கணிக்கப்பட்டது போலவே நடந்துள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 3 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்து வருகிறது. புதிய வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளபோதிலும், வேலையின்மை விகிதம் 4.4 சதவீதமாகவே உள்ளது. இந்த ஆண்டு ஜூலை-செப்டம்பர் காலாண்டில் அமெரிக்கப் பொருளாதாரம் 4.3 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே மேலோட்டமாகப் பார்க்கும்போது பொருளாதாரம் சீராக இருப்பதாகத் தெரிகிறது.
ஆனால் அமெரிக்க பொருளாதாரத்தின் மேற்பரப்புக்குக் கீழே கடுமையான ஆபத்துகள் மறைந்துள்ளன. நுகர்வோர் அதிக செலவுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாலும் வேலையின்மை அதிகரித்துள்ளதாலும், நாட்டின் வளர்ச்சி பணக்காரப் பிரிவினரிடையே மட்டுமே குவிந்துள்ளதாலும் உண்மையான நிலை மிகவும் சிக்கலானதாகவே உள்ளது.
ஏறக்குறைய அமெரிக்கப் பொருளாதாரத்தின் ஒவ்வொரு குறியீடும் சிவப்பு மண்டலத்தில் தான் உள்ளது. நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை 4.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. பணவீக்கம் மத்திய வங்கியின் 2 சதவீத இலக்கைத் தாண்டி 2.7 சதவீதமாக உள்ளது. 2008ஆம் ஆண்டின் பொருளாதார மந்த நிலைக்கு மேல் நுகர்வோர் நிலை சரிவைச் சந்தித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து கிட்டத்தட்ட எந்த வேலைகளுக்கும் ஊழியர்கள் சேர்க்கப்படவில்லை என்பதோடு, ஊதிய உயர்வுகளும் பெரிதாக வழங்கப் படவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது அமெரிக்காவில் சுமார் 7,10,000 பேர் கூடுதலாக வேலை இல்லாமல் உள்ளனர். அடுத்த ஆண்டு அமெரிக்காவின் வேலையின்மை 5 சதவீதத்துக்கும் மேல் உயரவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
ஊதிய உயர்வும் இல்லாமல், அன்றாட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால், குறைந்த வருவாய் உடைய குடும்பங்கள் கடுமையான சிரமத்தில் சிக்கித் தவிக்கின்றனர். செயற்கை நுண்ணறிவு தொடர்பான விஷயங்களில் மட்டுமே நிலையான தனியார் முதலீடுகளை ஈர்த்துள்ள அமெரிக்காவில் வணிகங்களுக்கு இடையேயும் சமமற்ற நிலை பெரிதாகிக் கொண்டே போகிறது.
இதனால் அடுத்த 4 மாதத்துக்குள் “ஸ்டாக்ஃப்ளேஷன்” (Stagflation) அதாவது, உயர் பணவீக்கம் மற்றும் குறைந்த வளர்ச்சி- என்ற ஆபத்து உருவாகலாம் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த 12 மாதங்களில் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு 25 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.
30,000 அடி உயரத்தில் இருந்து பார்க்கும்போது அமெரிக்காவின் பொருளாதாரப் பெருங்கடல் அமைதியாக இருப்பது போலத் தோன்றினாலும், கீழே பல ஆபத்தான சுனாமி நீரோட்டங்கள் உருவாகி வருகின்றன என்பது தான் உண்மை.
















