அருணாச்சல பிரதேசம், தைவானை முழுமையாகக் கைப்பற்ற சீனா கொடிய திட்டத்தை வகுத்திருப்பதை, பெண்டகன் அறிக்கை தோலுரித்துக் காட்டியுள்ளது… சீனா தீட்டிய திட்டம் என்ன… பெண்டகன் அறிக்கை என்ன சொல்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்…
இந்தியாவின் எல்லைப்பகுதிகளை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, கிழக்கு லடாக்கில் பல ஆண்டுகளாக இந்தியாவுடன் மோதல் போக்கைக் கடைபிடித்து வந்தது… இருதரப்பு ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை, இந்த விவகாரத்தை மட்டுப்படுத்தியிருந்தாலும், அருணாச்சல பிரதேசத்தை ஒரு மோதல் புள்ளியாக வைத்திருக்கவே சீனா விரும்புகிறது.
இந்தச் சூழலில் அமெரிக்க பாதுகாப்புத்துறையான பெண்டகன் வெளியிட்டுள்ள அறிக்கை சீனாவின் தீய திட்டத்தின் மீது வெளிச்சத்தை பாய்ச்சியுள்ளது… Beijing’s Sinister Plan என்று குறிப்பிட்டுள்ள பெண்டகன் அறிக்கையில், சீனா தனது பிராந்திய செல்வாக்கை உலகளவில் கணிசமாக விரிவுபடுத்த முயற்சிப்பதாகவும், போர்களை எதிர்த்துப் போராடி வெற்றி பெறக்கூடிய உலகத்தரம் வாய்ந்த ராணுவத்தை உருவாக்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயலாற்றி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான அருணாச்சல பிரதேசத்தின் மீதான தனது உரிமை கோரலை சீனா தனது முக்கிய நலன்களில் ஒன்றாகச் சேர்த்துள்ளதோடு, அதனைத் தைவானுக்கு இணையாக வைத்துள்ளதாகவும் பெண்டகன் அறிக்கை கூறுகிறது. அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில், அருணாச்சலப் பிரதேசம், தைவான் மற்றும் தென் சீனக் கடலில் சீனாவின் பிராந்திய மற்றும் கடல்சார் உரிமைகளை 2049ம் ஆண்டுக்குள் நிலை நிறுத்துவதே சீனாவின் எண்ணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பிரேமா தோங்டாக், லண்டனில் இருந்து சீனா வழியாக ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டபோது, ஷாங்காயில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியது. தோங்டாக்கின் கூற்றுப்படி, அருணாச்சலப் பிரதேசத்தை அவரது பிறந்த இடமாகப் பட்டியலிட்டதால் அவரது பாஸ்போர்ட்டை செல்லாது என அறிவித்த சீன அதிகாரிகள், சீன பாஸ்பார்ட்டை பெற்று பயணிக்கும்படி அறிவுறுத்தியதும் விமர்சனத்திற்கு உள்ளானது.
அதன் தொடர்ச்சியாக அண்மையில், அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக விவரிக்கும் வீடியோவை வெளியிட்டதற்காக ஒரு யூடியூபர் சீனாவில் கைது செய்யப்பட்டார். இந்த வீடியோ தோங்டாக்கிற்கு ஆதரவாக உருவாக்கப்பட்டிருந்தது… அருணாச்சலப் பிரதேசத்தை சீனா தனது சொந்தப் பிரதேசமாகக் கூறி, அந்தப் பகுதியை தெற்கு திபெத் அல்லது சாங்னான் என்று குறிப்பிடுகிறது.
பிரிட்டிஷ் ஆட்சியின்போது 1914 ஆம் ஆண்டு வரையப்பட்ட மெக்மோகன் கோட்டினை பெய்ஜிங் அங்கீகரிக்கவில்லை. இது பிரிட்டிஷ் இந்தியாவிற்கும் அப்போது சுதந்திரமாக இருந்த திபெத்திற்கும் இடையிலான எல்லையை வரையறுத்தது. தொடக்கத்தில், தவாங் பகுதியை மட்டும் சொந்தம் கொண்டாடிய பெய்ஜிங், காலப்போக்கில், அருணாச்சல பிரதேசம் முழுவதும் தங்களுக்கே சொந்தம என்று உரிமை கோரி வருகிறது.
சமீபத்திய ஆண்டுகளில், இந்தியா மீது அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கான புதிய சீனப் பெயர்களின் பட்டியலை அது மீண்டும் மீண்டும் வெளியிட்டது.
இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டன. அருணாச்சல பிரதேசத்தில், சீனாவின் உத்திகுறித்து கவனத்தில் கொண்டிருப்பது, அமெரிக்காவின் தெளிவான புரிதலைக் காட்டுவதாக இந்தியாவின் முன்னாள் தூதரக அதிகாரி மகேஷ் சச்தேவ் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், அருணாச்சலப் பிரச்சனையை மையப்படுத்தி, சீனாவுக்கு எதிராக இந்தியாவை தூண்டி விட அமெரிக்கா முயல்கிறது என்ற பார்வையையும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் முன் வைக்கின்றனர்.
















