அமெரிக்காவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள எப்ஸ்டீன் ஆவணங்களில் உள்ள ட்ரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானது என்று அமெரிக்க நீதித்துறை அறிவித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தன. அதன் விளைவாக, ‘எப்ஸ்டீன் ஆவணங்கள்’ (Epstein files) என்ற பெயரில் அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் முக்கிய ஆவணங்களை வெளியிட்டு வருகிறது.
13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் இடம்பெற்றுள்ள எப்ஸ்டீன் பைல்ஸ் பதிவேற்றம் செய்யப்பட்ட மறுநாளே அதிலிருந்து 16 புகைப்படங்கள் திடீரென நீக்கப்பட்டன. குறிப்பாக, ட்ரம்ப் தொடர்பான சர்ச்சைக்குரிய புகைப்படங்களே மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீக்கப்பட்ட புகைப்படங்களை மீண்டும் இணையதளத்தில் வெளியிட எதிர்க்கட்சியினர் முயற்சித்தனர்.
மேலும், இந்த நடவடிக்கை உண்மையை மறைக்கும் அரசின் முயற்சி என அவர்கள் கடுமையாக விமர்சித்த நிலையில் நீக்கப்பட்ட புகைப்படங்களில் சில மீண்டும் பதிவேற்றம் செய்யப் பட்டன. இந்நிலையில், புதிதாக வெளியிடப்பட்ட 11,000-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட எப்ஸ்டீன் பைல்ஸில் அதிபர் ட்ரம்ப் பற்றிய பல குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதில் நியூயார்க்கைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், எப்ஸ்டீன் மற்றும் கிஸ்லைன் மேக்வெல்லுடன் ட்ரம்ப் மேற்கொண்ட பல விமானப் பயணங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
1993 மற்றும் 1996-க்கு இடையில் குறைந்தது எட்டு விமானப் பயணங்களில் ஒரு பயணியாக ருந்த ட்ரம்ப்புடன் , குறைந்தது நான்கு பயணங்களில் கிஸ்லைன் மேக்ஸ்வெல்லும் உடனிருந்தார் என்றும் அந்த வழக்கறிஞர் கூறியுள்ளார். மேலும், பிற பயணங்களில் மார்லா மேப்பிள்ஸ், அவரது மகள் டிஃபானி மற்றும் அவரது மகன் எரிக் ஆகியோருடன் பயணம் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒரு குறிப்பிட்ட ‘ஏ’ என்பவர் கிஸ்லைன் மேக்ஸ்வெல்லிடம் ‘முறையற்ற நண்பர்களை’க் கேட்டு அனுப்பிய பல மின்னஞ்சல்களும் இதில் இடம் பெற்றுள்ளன. ‘ஏ’ என்பவர் யார் என்பது உறுதிப்படுத்தப்படாத நிலையில், அந்த ‘ஏ’ என்பவர் முன்னாள் பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூதான் என்றும், ட்ரம்ப் தான் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல ஆண்டுகளாக எப்ஸ்டீனுடன் நண்பராக இருந்ததாகவும், எப்ஸ்டீன் ஒரு “மோசமானவர்” என்பதால் அவரை விட்டு விலகியதாகவும் ஏற்கெனவே ட்ரம்ப் மறுத்துள்ள நிலையில், வெளியிடப்பட்டுள்ள எப்ஸ்டீன் பைல்ஸ் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இளம் பெண் விளையாட்டு வீராங்கனைகளை பாலியல் தொழிலுக்காக எப்ஸ்டீனுக்கு அனுப்பிவைத்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் மருத்துவர் லாரி நாசருக்கு, எப்ஸ்டீன் அனுப்பிய கடிதமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தில் உள்ள அஞ்சல் குறியீடு விர்ஜினியாவைச் சேர்ந்ததாகவும் அந்தச் சமயத்தில் எப்ஸ்டீன் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
பதில் முகவரியும் தவறாக இருப்பதாகவும் கடிதத்தில் எப்ஸ்டீனின் கைதி எண் குறிப்பிடவில்லை என்றும் அனைத்துக்கும் மேலாக எப்ஸ்டீன் மரணமடைந்த 3 நாட்களுக்குப் பிறகே, இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடிதத்தில் உள்ள கையெழுத்து எப்ஸ்டீனின் கையெழுத்துடன் பொருந்தவில்லை என்பது மேலும் சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. எனவே, லேரி நசாருக்கு எப்ஸ்டீன் அனுப்பிய இந்தக் கடிதம் போலியானது என தெரியவந்துள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள எப்ஸ்டீன் பைல்ஸில், அவருடன் கூட்டாளியாக இருந்த 10 நபர்களின் பெயர்கள் அடங்கிய FBI யின் மின்னஞ்சல்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக அதிபர் ட்ரம்ப் மீதான பாலியல் வன்முறை குற்றச்சாட்டும் இடம்பெற்றுள்ளது.
1995-ல் ட்ரம்ப் ஒரு பெண்ணை பாலியல் வன்முறை செய்வது குறித்து பேசிக்கொண்டிருந்ததை தான் ஒட்டுக்கேட்டதாகவும், அப்போது “ஜெஃப்ரி” என்ற பெயரைக் குறிப்பிட்டதாகவும் ஒரு ஓட்டுநர் வாக்குமூலமாகப் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் ட்ரம்ப் மீதான பாலியல் குற்றச் சாட்டுக்கள் ஆதாரமற்றவை மற்றும் பொய்யானவை என்று கூறியுள்ள அமெரிக்க நீதித் துறை, நம்பகத்தன்மை கொஞ்சமாவது இருந்திருந்தால், இந்தக் குற்றச்சாட்டுகள் நிச்சயமாக அதிபர் ட்ரம்புக்கு எதிராக ஏற்கெனவே ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
















