கறிக்கோழி பண்ணை விவசாயிகள் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். இதனால் மக்களின் முக்கிய ப்ரோட்டின் உணவான கோழி இறைச்சி விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பைத் தற்போது பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் அசைவ உணவு பிரியர்களின் மிக முக்கிய உணவாகக் கோழி இறைச்சி உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் தினசரி மூன்று லட்சம் கிலோ கோழி இறைச்சி விற்பனை ஆகிறது. அதிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் நான்கு லட்சம் கிலோ கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு காலத்தில் கோழி இறைச்சியை பரவலாக உண்ணும் வழக்கம் இல்லாமல் இருந்த நிலையில், பண்ணை கறிக்கோழிகள் வரத் துவங்கிய பின்னர் சாதாரண பாமர மக்களும் எளிதில் அசைவ உணவு உண்ணும் நிலையை அடைந்தனர்.
விலை குறைவு, அதிக புரோட்டின் என எளிய மக்களின் விருப்ப உணவாகக் கோழி இறைச்சி உள்ளது. இந்நிலையில்தான் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் கோழி பண்ணைகள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள ஏராளமான விவசாயிகள் கறிக்கோழி பண்ணை அமைத்துக் கூலிக்கு கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பிராய்லர் நிறுவனங்களிடமிருந்து கோழிக்குஞ்சுகளைப் பெற்று 42 நாட்களுக்கு வளர்த்துக் கொடுக்கும் பணியைச் செய்து வருகின்றனர்.
இதில் ஒரு கிலோ பிராய்லர் கோழிக்கு 6 ரூபாய் 50 காசு மட்டுமே கூலியாக வழங்கப்படுகிறது. மின் கட்டணம் உயர்வு, கோழிக்குஞ்சுகள் வெப்பநிலையைச் சம நிலையில் வைத்திருக்கத் தேவையான அடுப்புக்கரி மூட்டைகள் என அனைத்தும் பல மடங்கு விலை உயர்ந்த நிலையில் ஆறு ரூபாய் 50 காசு மட்டுமே கூலி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகக் குமுறல் எழுந்துள்ளது.
கூலி உயர்த்தப்படாததோடு பல மடங்கு உயர்ந்துள்ள மூலப் பொருட்கள் விலையால் கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். பிராய்லர் கோழிகளுக்கு 20 ரூபாய், நாட்டுக்கோழி வளர்ப்புக்கு 25 ரூபாய் என கூலியை உயர்த்திக் கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள கறிக்கோழி பண்ணை விவசாயிகள் 1ம் தேதி முதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
புதிய கோழிக்குஞ்சுகள் பெறப்பட மாட்டாது எனவும் அறிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கறிக்கோழி வர்த்தகம் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் இன்றியமையாத அசைவ உணவை தங்கு தடையின்றி மக்களுக்கு வழங்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கால்நடை பராமரிப்பு துறை, கறிக்கோழி உற்பத்தியாளர்கள், பண்ணை விவசாயிகள் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து தீர்வு காண வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.
இல்லையேல் அறிவித்தபடி உற்பத்தி நிறுத்தப் போராட்டம் 1ம் தேதி தொடங்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
















