நைஜீரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத முகாம்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திடீர் தாக்குதலுக்கு என்ன காரணம்? பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நைஜீரியா, ஆப்பிரிக்க கண்டத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக விளங்குகிறது. இங்குப் பல ஆண்டுகளாகவே பயங்கரவாதம் மிகப்பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. குறிப்பாக, நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியானது பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் நிறைந்த பகுதியாக உள்ளது.
அங்குச் செயல்பட்டு வரும் போகோ ஹராம் என்ற அடிப்படைவாத அமைப்பு, இதுவரை ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்துள்ளது. இதுபோதாதென்று, அண்மை காலமாக ஐஎஸ் பயங்கரவாதிகளும் நைஜீரியாவில் தொடர் தாக்குதல்களில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இதனால், நைஜீரிய நாட்டின் பொருளாதாரம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. கல்வி கற்பதில் நிலவும் சிக்கல், வறுமை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் மோசமடைந்துள்ளது.
குறிப்பாக, நைஜீரியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் அதிக பாதிப்பை சந்தித்து வருவதாகவும், அவர்கள் அதிகளவில் கொன்று குவிக்கப்படுதாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நைஜீரியாவில் மத சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாகவும், கிறிஸ்தவர்களின் இருப்பே கேள்விக்குறியாகி இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
அத்துடன், கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க நைஜீரிய அரசு தவறிவிட்டதாகவும், இந்த விவகாரத்தில் சாதகமான நடவடிக்கையை எடுக்கப் பென்டகன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார். அத்துடன், நைஜீரியாவிற்கான அனைத்துவித உதவிகளும் நிறுத்தப்படும் எனவும், இஸ்லாமிய பயங்கரவாதிகளை முற்றிலுமாக அழிக்க அமெரிக்க துருப்புகள் நைஜீரியாவிற்குள் நுழையும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். சர்வதேச மதச் சுதந்திரச் சட்டத்தின்கீழ் நைஜீரியாவைக் கவலைக்குரிய நாடாகவும் ட்ரம்ப் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, அமெரிக்க – ஆப்பிரிக்க படை நைஜீரியாவில் உள்ள பயங்கரவாதிகளை அழிப்பதற்கான திட்டங்களை வகுக்கும் பணியில் ஈடுபட்டது. வகுக்கப்பட்ட திட்டங்கள், அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கும், பென்டகன் அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இதனையடுத்து, வடமேற்கு நைஜீரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராகச் சக்தி வாய்ந்த தாக்குதலை நடத்தும்படி, அமெரிக்க ராணுவத்திற்கு ட்ரம்ப் உத்தரவிட்டார். அதன்படி நைஜீரியாவின் சோகோட்டோ மாகாணத்தில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது அமெரிக்க படை வான்வழி தாக்குதல் நடத்தியது.
இதில் பலர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலை நைஜீரிய வெளியுறவுத்துறை அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது. பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமான தாக்குல்கள் நடத்தப்பட்டதாகவும், அமெரிக்காவின் நடவடிக்கைக்குத் துணைநின்று வருவதாகவும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடவடிக்கை குறித்து ட்ரம்ப் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.
“கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்தாவிட்டால், பயங்கரவாதிகள் அனைவரும் நரகத்திற்கு செல்ல வேண்டி வரும் என நான் முன்பே எச்சரித்திருந்தேன். தற்போது அது நிகழ்ந்துவிட்டது. அமெரிக்க பாதுகாப்பு படை சரியான தாக்குதலை நடத்தியுள்ளது. எனது தலைமையிலான அமெரிக்க அரசு இஸ்லாமிய பயங்கரவாதம் செழிக்க அனுமதிக்காது.
தாக்குதலை சிறப்பாக நடத்தி முடித்த நமது ராணுவத்தை கடவுள் ஆசீர்வதிக்கட்டும். இறுதியாக, உயிரிழந்த பயங்கரவாதிகள் உட்பட அனைவருக்கும் merry christmas”. அமெரிக்காவின் பயங்கரவாத நடவடிக்கைக்கு நைஜீரிய அரசு ஆதரவு தெரிவித்திருந்தாலும், கிறிஸ்தவர்கள் மட்டும் குறிவைக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை அந்நாடு மறுத்துள்ளது. கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் சம அளவிலேயே உள்ளதாகவும், இதனை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் நைஜீரிய அரசு தெரிவித்துள்ளது.
















