மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து பதிலளிக்க கோரி நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மாஞ்சோலை தேயிலை தோட்டப் பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்களை அங்கிருந்து காலி செய்ய மாவட்ட நிர்வாகமும், தமிழக வனத்துறையும் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாஞ்சோலையில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை தேவைகளையும் அரசு செய்து தரவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கை கையில் எடுத்த தேசிய பட்டியலினத்தவர் ஆணையம், குடியிருப்புகளைக் காலி செய்யும் நடவடிக்கை மற்றும் மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பு குறித்து பதிலளிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.
மேலும் 15 நாட்களுக்குள் உரிய விளக்கத்தை தருமாறு தெரிவித்துள்ள ஆணையம், நெல்லை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க தவறும் பட்சத்தில் டெல்லியில் உள்ள தேசிய ஆணையத்தின் முன்பு நிறுத்தப்படுவார் என எச்சரித்துள்ளது.
















