வெளி மாநிலங்களுக்குச் செல்லும் போது சிறுபான்மையினர் பாதிக்கப்படுவதாகப் பேசும் முதல்வர் ஸ்டாலின், அவரது மாநிலத்தில் அதிகமுள்ள இந்துக்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதில்லை என பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை கோடம்பாக்கம் மற்றும் தி. நகர் பகுதிகளில் மத்திய அரசின் நலத்திட்ட முகாம் மற்றும் மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.
இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நலத்திட்ட முகாமையும், மருத்துவ முகாமையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதன் பிறகு, தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த வினோஜ் பி.செல்வம், தமிழக அரசு செய்ய வேண்டிய வேலையை, பாஜக நிர்வாகிகள் தங்கள் சொந்த பணத்தை செலவிட்டு செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், திருப்பரங்குன்றத்தில் பீஃப் பிரியாணி சாப்பிடும் கும்பலுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் நிலையில், தீபமேற்ற மறுக்கும் திமுக அரசு இந்து விரோத ஆட்சி நடத்துவதாகக் கூறினார்.
வேங்கைவயல் பிரச்னையில் மக்களை சந்தித்து ஆதரவு தெரிவிக்காத திருமாவளவன், திருப்பரங்குன்றம் விவகாரத்தை எய்ம்ஸ் உடன் ஒப்பிடுவது தவறு எனச் சுட்டிக்காட்டிய வினோஜ் பி.செல்வம், திருமாவளவன் எம்பியாக உள்ள சிதம்பரத்திற்கு எந்த ஒரு வளர்ச்சியும் கொண்டுவரப்படவில்லை என்றும் விமர்சித்தார்.
















