நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தனியார் பயிற்சி நிறுவனத்தில் பயின்று வங்கிப் பணியாளராகத் தேர்ச்சி பெற்ற பெண்ணை, முதல்வர் திட்டத்தின் கீழ் பயின்று தேர்ச்சி பெற்றதாகத் திமுகவினர் போலியான செய்தி பரப்பி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அத்தனூர் பேரூராட்சியைச் சேர்ந்த கமலி என்பவர் நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் கணித பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை படித்து முடித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகச் சேலத்தில் உள்ள தனியார் பயிற்சி நிறுவனத்தில் வங்கி தேர்வுகளுக்காக பயிற்சி பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற வங்கி தேர்வு ஒன்றில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றுள்ளார். தனியார் பயிற்சி நிறுவனத்திலும் மற்றும் வீட்டிலும் படித்து வங்கியில் பணியாளராகத் தேர்வாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகப் பட்டதாரி பெண் கமலி தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு சில நாட்கள் மட்டுமே முதல்வர் திட்டத்தின் கீழ் கட்டணமில்லா பயிற்சி பள்ளிக்குச் சென்று வந்ததாகவும் கூறியுள்ளார்.
ஆனால், திமுகவினர் முதல்வர் திட்டத்தின் கீழ் கட்டணமில்லா பயிற்சி பள்ளியில் படித்ததால் மட்டுமே பெண் தேர்ச்சி பெற்றதாக ஒரு பொய்யான விளம்பரத்தைப் பரப்பி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்தப் பெண்ணின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
















