தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட முடிச்சூர் – தாம்பரம் பிரதான சாலை, குண்டும் குழியுமாகக் காட்சியளிப்பதால் விபத்துகள் ஏற்படுவதுடன், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
முடிச்சூர் – தாம்பரம் பிரதான சாலை, பல மாதங்களாகக் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கிறது. மேலும், இதே பகுதியில்தான் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜாவின் இல்லம் அமைந்துள்ளது.
ஆனால் இத்தனை மோசமான சாலையைச் சீரமைக்க வேண்டும் என்ற எண்ணமின்றி, தினந்தோறும் அவர் எந்தச் சலனமும் இல்லாமல் சாலையைக் கடந்து செல்வதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
முடிச்சூர் – தாம்பரம் பிரதான சாலையின் அவலநிலையால் வாகனங்கள் அவ்வப்போது விபத்துக்குள்ளாவதாகவும், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பெரும் இன்னல்களைச் சந்திப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, இந்தச் சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவர்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.
















