குழந்தைகளை தாய் பாதுகாப்புடனும் ஒழுக்கத்துடனும் வளர்க்கத் தவறினால், அது குடும்பத்தை மட்டுமின்றி, இந்தச் சமுகத்தின் அடித்தளத்தையே வீழ்த்திவிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, சிறுமியின் தாயும், அவரது ஆண் நண்பரும் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சிறுமியை, அவரது தாயின் நண்பர் பாலியல் வன்கொடுமை செய்ததை காவல்துறை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்துள்ளதாகக் கூறிய நீதிபதிகள், சிறுமியின் தாய்க்கும், அவரது நண்பருக்கும் ஆயுள் தண்டனை விதித்த தீர்ப்பில் தலையிட எந்தக் காரணமும் இல்லை எனக் கூறினர்.
தொடர்ந்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது, குழந்தை வளர்ப்பில் தாயின் புனிதமான கடமைகளை எடுத்துரைத்த நீதிபதிகள், குழந்தைகளை தாய் பாதுகாப்புடனும் ஒழுக்கத்துடனும் வளர்க்கத் தவறினால், அது குடும்பத்தை மட்டுமின்றி, இந்தச் சமுகத்தின் அடித்தளத்தையே வீழ்த்திவிடும் என்றும் கருத்து தெரிவித்தனர்.
















