தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது நினைவு நாளைத் தேமுதிக குருபூஜையாகக் கடைபிடித்து வருகிறது.
இந்தநிலையில் விஜயகாந்தின் 2ம் ஆண்டு நினைவுத் தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் முதல் நினைவிடம் வரை பிரேமலதா தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. இதில் அக்கட்சியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
பின்னர் சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில், அவரது மனைவியும், கட்சியின் பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதேபோல் விஜயகாந்தின் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
















