கீழடி அருகே சொட்டதட்டி கிராமத்தில் உள்ள ஓட்டு வீட்டுக்கு 5 ஆயிரத்து 967 ரூபாய் மின் கட்டணம் வந்ததால் வயதான தம்பதியினர் அதிர்ச்சியடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம், கீழடி அருகே சொட்டதட்டி கிராமத்திற்கு பொட்டப்பாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது.
சொட்டதட்டி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட வீடுகளுள்ள நிலையில், வயதான விவசாய கூலி தொழிலாளிகளான கோட்டைச்சாமி – முனியம்மாள் தம்பதியின் வீட்டிற்கு 5 ஆயிரத்து 967 ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கோட்டைச்சாமி, மின் வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கூலி வேலைக்குக் கூட செல்ல முடியாமல் முதியோர் ஓய்வூதியத்தை வைத்து வயதான தம்பதி வாழ்க்கை நடத்தி வருவதாகவும், இவ்வளவு மின்கட்டணம் செலுத்த முடியாது எனவும் உறவினர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, டிஜிட்டல் மீட்டரில் கணக்கிடும்போது தவறு ஏற்பட்டிருக்கலாம் என்றும், பிரச்சனைக்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















