சேலத்தில் மிகவும் பழமையான லட்சுமி நாராயண சுவாமி கோயிலின் மதில்சுவரை, கல்வெட்டு வைப்பதற்காகத் திமுகவினர் இடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் லட்சுமி நாராயண சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் சார்பில் தங்கக் கவசம் வழங்கப்பட்டது.
பொதுவாக, தங்கக் கவசம் போன்ற ஆபரணங்களை வழங்குபவர்களுக்குக் கல்வெட்டு வைக்கப்படுவதில்லை என்கிற நிலையில், திமுகவினர் முதல்வர், துணை முதல்வர், துறை மற்றும் உள்ளூர் அமைச்சர்களின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டை வைத்துள்ளனர்.
இதற்காகக் கோயிலின் பக்கவாட்டில் துளையிடப்பட்டுள்ளது. இதனையறிந்த இந்து முன்னணி மற்றும் திருத்தொண்டர்கள் சபையினர், கோயிலுக்கு வந்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாகக் கோயிலில் போலீசார் குவிக்கப்பட்டதால், பதற்றமான சூழல் நிலவியது.
















