மயிலாடுதுறையில் உள்ள டாஸ்மாக் கடையில் கூடுதலாக வசூலித்த 10 ரூபாயை திருப்பிக் கேட்ட மதுபிரியருடன் ஊழியர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழகம் முழுவதும் மதுபாட்டிலுக்கு கூடுதலாகப் பத்து ரூபாய் வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபிரியர் ஒருவர் 500 ரூபாய் கொடுத்து மதுபாட்டில்களை வாங்கியுள்ளார்.
அப்போது, மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாயை ஊழியர் வசூலித்ததாகத் தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த மதுபிரியர், மதுபாட்டிலுக்கு கூடுதலாக ஏன் 10 ரூபாய் வசூலிக்கிறீர்கள் என்றும், அரசாங்கம் கூடுதலாகப் பணம் வசூலிக்கச் சொல்கிறதா எனவும் கேள்வி கேட்டு ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, ஊழியர் 5 ரூபாயை திருப்பிக் கொடுத்தபோது, மீதி 5 ரூபாயை யார் கொடுப்பார்கள் எனவும் கேட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
















