கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே முதலையின் வாயில் சிக்கிய விவசாயி பொதுமக்களின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெய்யாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பவர் ஆடு மேய்க்கும் தொழிலைச் செய்து வருகிறார்.
இவர் வழக்கம் போல ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற போது அங்கிருந்த பழைய கொள்ளிடம் ஆற்றில் கை, கால்களை கழுவ முயன்றார்.
அப்போது தண்ணீருக்குள் மறைந்திருந்த முதலை செளந்தர்ராஜனை கவ்வி இழுத்து சென்றது.
அவரது கூச்சல் சத்தத்தைக் கேட்ட சக விவசாயிகள் துரிதமாகச் செயல்பட்டு அவரை சிறுகாயங்களுடன் மீட்டனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதி முழுவதும் பரவிய நிலையில் முதலை நடமாட்டத்தை கண்காணித்து அப்புறப்படுத்த வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
















