ராஜஸ்தானில் 60 நாட்களாகச் சிறுமியின் மூக்கில் இருந்த அட்டைப்பூச்சி அகற்றப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி 2 மாதங்களுக்கு முன்பு ஆடு மேய்ப்பதற்காகக் காட்டிற்கு சென்றார். அங்குத் தாகம் எடுத்ததால் அருகில் இருந்த கால்வாயில் தண்ணீர் குடித்துள்ளார்.
அப்போது தண்ணீரில் இருந்து சிறுமியின் மூக்கிற்குள் நுழைந்த அட்டைப்பூச்சி 2 மாதங்களாக அங்கேயே சிறுமியின் ரத்தத்தை குடித்து வளர்ந்துள்ளது. ஒருகட்டத்தில் அட்டைப்பூச்சி பெரியதாக மாறவும், மூச்சுவிட முடியாமல் சிறுமி அவதிப்பட்டுள்ளார்.
மேலும், கடுமையாக வலி எடுத்ததுடன் சிறுமிக்கு மூக்கில் இருந்து ரத்தமும் வந்துள்ளது. இதனையடுத்து சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பரிசோதனையில் சிறுமியின் மூக்கில் பெரிய அட்டைப்பூச்சி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
இதனையடுத்து மருத்துவர்கள் மிகவும் சிரமப்பட்டு, சிறுமியின் மூக்கில் இருந்த 3 அங்குல நீள அட்டைப்பூச்சியை அகற்றினர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
















