தமிழ் மற்றும் தமிழர் மீது கொண்டுள்ள பாசத்தின் காரணமாகத்தான் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு மிக அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கபதற்காகப் புதுச்சேரி விமான நிலையம் வந்தடைந்த துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, கம்பன் கலையரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், எல்லோரையும் வரவேற்கும் நகராகப் புதுச்சேரி உள்ளது எனக் கூறினார்.
யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்று ஐநாசபையில் பிரதமர் பேசியபோது தமிழர்களின் விருந்தோம்பல், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை உணர்த்தியது எனத் தெரிவித்தார்.
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராகக் குறுகிய காலமே இருந்தாலும், அவை எல்லாம் மிகப்பெரிய மன நிறைவை தந்தது எனக் குறிப்பிட்டார்.
மேலும், புதுச்சேரிக்கு மகத்தான திட்டங்கள் வரவுள்ளதாகவும், அடுத்த முறை பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வரும்போது அந்தத் திட்டத்திற்கான செயல் வடிவம் கிடைக்கும் எனவும் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
முன்னதாகப் பேசிய துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், இந்திய ஜனநாயகத்தின் அடையாளமாகக் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளார் எனப் புகழாரம் சூட்டினார்.
புதுச்சேரி மக்கள் குடியரசு துணை தலைவர் குறித்து பெருமையாகச் சொல்வதாகவும், இளைஞர்கள் முன்மாதிரியாகப் பார்ப்பதாகவும் கூறினார்.
மேலும், குடியரசு துணை தலைவரின் ஒவ்வொரு வார்த்தையும் இளைஞர்கள் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனத் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் வலியுறுத்தினார்.
இதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, இளமை பருவத்தில் இருந்து சி.பி.ராதாகிருஷ்ணனை நன்கு தெரியும் என்றும், அவருடன் பல நாட்கள் கழித்துள்ளதாகவும் கூறினார்.
துணைநிலை ஆளுநராக இருந்தபோது புதுச்சேரியின் வளர்ச்சிக்காகப் பெரிய அளவில் உதவிகளை செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் எம்பிக்களை கட்டுக்குள் வைத்திருப்பதை பார்த்து வியந்துபோனதாகவும் கூறினார்.
மேலும், சி.பி.ராதாகிருஷ்ணனின் இறை பக்தி, கடவுளின் மீதான நம்பிக்கைதான் அவரை குடியரசு துணை தலைவர் பதவி என்ற நிலைக்கு உயர்த்தியது என முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.
















