ஆப்ரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானுக்குக் கடுமையான சேதம் ஏற்பட்டது என்று அந்நாட்டின் துணைப்பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த ஏப்ரல் மாதத்தில் பஹல்காமில் நடந்த பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி இந்து சுற்றுலாப் பயணிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத தளங்கள் மற்றும் பயிற்சி முகாம்களை அழித்த இந்தியா சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளைக் கொன்றது.
பதிலுக்கு இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் இராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய 800க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இந்தியா நடுவானிலேயே இடைமறித்து அழித்தது. மேலும், பாகிஸ்தானின் நூர் கான் சர்கோதா, ரஃபிக்கி, ஜேக்கபாபத், முரிட்கே உள்ளிட்ட 11 முக்கிய விமானப்படைத் தளங்களை இந்தியாவின் ஏவுகணைகள் தாக்கி அழித்தன.
இந்தியாவின் அதிரடித் தாக்குதலைத் தாங்க முடியாத பாகிஸ்தான் இராணுவம் கெஞ்சியதால் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்தியாவின் தாக்குதலையடுத்து கடந்த மே-13 ஆம் தேதி மேக்சர் செயற்கைக்கோள் புகைப்படங்கள் பாகிஸ்தானின் நூர் கான், சர்கோதா, ஜேக்கபாபத் ஆகிய விமானப்படை தளங்கள் சேதமடைந்திருப்பதைத் தெளிவாகக் காட்டி இருந்தன.
ஆப்ரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானுக்கு எந்தப் பாதிப்புகளும் இல்லை என்று தொடர்ந்து மறுத்துவந்த அந்நாட்டுத் தலைவர்கள், இப்போது உண்மையைப் பேசத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அந்நாட்டு துணைப்பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார், நூர் கான் விமானப்படைத் தளத்தை இந்திய ட்ரோன்கள் தாக்கியதாகவும், முக்கிய ராணுவ நிலையத்தைச் சேதப்படுத்தியதாகவும், அங்கிருந்த ஊழியர்கள் படுகாயம் அடைந்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்.
36 மணி நேரத்தில், குறைந்தது 80 ட்ரோன்கள் அனுப்பப்பட்டன என்று கூறியுள்ள இஷாக் தார், அதில் ஒரே ஒரு ட்ரோனின் தாக்குதலே இந்தக் கடுமையான பாதிப்புக்குக் காரணம் என்று உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் சவுதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் ஆகியோர் இந்தியாவுடன் பேச விரும்புவதாகத் தெரிவித்ததாகவும், இந்தியாவுடன் பாகிஸ்தான் போருக்குச் செல்ல விரும்பவில்லை என்று கூறியதாகவும் அதன்பிறகே போர் நிறுத்தத்துக்கு இந்தியாவிடம் வேண்டுகோள் வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பதுங்கு குழிக்குள் சென்று பாதுகாப்பாக இருக்கும்படி பாகிஸ்தான் ராணுவம் அறிவுறுத்தியதாக அந்நாட்டு அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் ஜர்தாரியின் மனைவியுமான பெனாசிர் பூட்டோவின் நினைவு நாளில் கலந்து கொண்டு பேசிய ஜர்தாரி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய தாக்குதலை அசிம் முனீர் தடுத்ததால் தான் அவருக்குப் பீல்டு மார்ஷல் பதவி வழங்கப் பட்டது என்றும் தெரிவித்திருந்தார். நூர் கான் விமானத் தளத்தைத் தாக்கியதாக இந்தியா இதுவரை வெளிப்படையாகக் கூறாதநிலையில், பாகிஸ்தானே முன்வந்து இப்போது தங்களின் முக்கிய விமானத் தளங்கள் தாக்கப்பட்டதாக ஒப்புக் கொண்டுள்ளது.
















