நீதிமன்றம் உத்தரவிட்டும் நெல்லை மாவட்ட வருவாய்துறை அதிகாரிகள் சாதியற்ற சான்றிதழ் வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனது குழந்தைகளுக்கு சாதி இருக்க வேண்டாம் என முடிவெடுத்தார். அதற்கான சான்றிதழை வழங்க கோரி அவர் விண்ணப்பித்தபோது, அதிகாரிகள் அதனை நிராகரித்தனர். இதனால், அதிருப்தியடைந்த அவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதனை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அமர்வு, கடந்த ஜூன் 10-ம் தேதி முக்கியத் தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில், சாதி இல்லை என குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கும்படி யாரேனும் கோரிக்கை விடுத்தால், அதனை ஏற்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக, தமிழக அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையை, குறிப்பிட்ட விதிமுறை இல்லை எனக்கூறி வருவாய்த்துறை அதிகாரிகள் மறுக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், சம்மந்தப்பட்டவர்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் சான்றிதழை வழங்க வேண்டும் எனக் கூறினர்.
உயர்நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்தது. பொதுமக்கள் தாங்கள் விரும்பினால், எந்தச் சாதியையும் சாராதவர் என்று விண்ணப்பித்து, அதற்கான சான்றிதழை பெற முடியும் என்பதை இந்த தீர்ப்பு தெளிவுபடுத்தியது.
இருந்தபோதும், நெல்லை மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த உத்தரவை சரிவர பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பலர் சாதியற்ற சான்றிதழ் கோரி வருவாய்த்துறை அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தனர். ஒரு மாதம் கடந்த நிலையிலும், அவர்களுக்கு இதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இதனால், பொதுமக்கள் அலைக்கழிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, நீதிமன்ற உத்தரவை அனைத்து அதிகாரிகளும் பின்பற்ற வலியுறுத்தி தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, சாதியற்ற சமத்துவ சமுதாயத்தை நோக்கிய பயணத்தில் மைல்கல்லாக அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதில் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு அலட்சியத்துடன் செயல்பட கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
















