பொள்ளாச்சி இட்லி, தோசைக்கு மனதை பறிகொடுத்துள்ளதாகச் சைக்கிளில் உலகை சுற்றி வரும் ஜெர்மன் பெண் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியைச் சேர்ந்த 47 வயதான உர்சுலா என்பவர் உலகம் முழுவதும் சாலை வழியாகச் சைக்கிளில் சுற்றுலா செல்லும் வித்தியாசமான பயணத்தை கடந்த மே மாதம் தொடங்கினார்.
சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள அவர், இதுவரை 17 நாடுகளை கடந்து 9 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்துத் தற்போது இந்தியா வந்தடைந்துள்ளார்.
தமிழகத்தின் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் சைக்கிளில் உர்சுலா சுற்றுலா மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மக்கள் மிகவும் நன்னடத்தையாகவும் அன்பாகவும் பேசியதாகக் கூறினார்.
தமிழக உணவுகள் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகக் கூறிய அவர், பொள்ளாச்சி தேங்காய் சட்னி, இட்லி, மசாலா தோசை, கிச்சடி போன்ற பாரம்பரிய உணவுகளை விரும்பி சுவைத்ததாகத் தெரிவித்தார்.
ஜெர்மனிக்கு திரும்பியபிறகு தமிழகத்திற்கு சுற்றுலா செல்லத் தன் நாட்டு மக்களுக்குப் பரிந்துரைப்பேன் என்றும் உர்சுலா மகிழ்ச்சியுடன் கூறினார்.
















