டாலருக்கு நிகரான ரியாலின் மதிப்பு வரலாறு காணாத அளவில் 14.2 லட்சம் என்ற அளவுக்குச் சரிந்ததால் ஈரானில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
ஈரான் மத்திய வங்கியின் ஆளுநராக 2022ல் முகமது ரேசா பெர்சின் பதவியேற்றபோது, அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இரு தினங்களுக்கு முன் அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 14 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாகச் சரிந்தது.
இது ஈரான் வரலாற்றிலேயே மிகக் குறைந்த மதிப்பாகக் கருதப்படும் நிலையில், நாட்டின் விலைவாசி உயர்வு 42.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. புதிய பட்ஜெட்டில் வரிகள் உயர்த்தப்படலாம் என்ற அறிவிப்பு வணிகர்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், டெஹ்ரான் கிராண்ட் பஜார் பகுதியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இஸ்பஹான், ஷிராஸ், மஷ்ஹத் உள்ளிட்ட பிற நகரங்களுக்கும் போராட்டம் பரவியது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிக் கலைத்த நிலையில், பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.
இந்நிலையில், போராட்டக்காரர்களின் நியாயமான கோரிக்கைகளை கேட்க வேண்டும் என உள்துறை அமைச்சருக்கு அதிபர் மசூத் பெசெஷ்கியான் உத்தரவிட்டுள்ளார். மேலும், ஈரானின் மத்திய வங்கி ஆளுநராக அப்துல் நாசர் ஹெம்மாட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
















