இங்கிலாந்தின் லண்டனில் ஓடும் ரயிலில் இந்தியர் ஒருவர் சமோசா விற்பனை செய்தது போன்ற வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
ரயில் பயணங்களின் போது சிற்றுண்டியை கொரித்துக் கொண்டே பயணிப்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அந்த வகையில் சிற்றுண்டிகளில் ஒன்றான சமோசாவுக்கு எனத் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
ஆனால், வெளிநாட்டில் ரயில் பயணங்களின் போது விதிக்கப்படும் கட்டுப்பாடுகளின் காரணமாக அங்கு வசிக்கும் இந்தியர்களுக்குச் சமோசாவை சாப்பிட்டுக் கொண்டே பயணிக்கும் கனவு என்பது கானல் நீர் தான்.
இந்நிலையில் லண்டன் மெட்ரோ ரயிலில் இளைஞர் ஒருவர் சமோசா விற்பனை செய்த வீடியோ இணையத்தில் சுமார் 90 லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் இனி லண்டன்வாசிகள் ரயில் பயணத்தின்போது பீகாரி சமோசாக்களை சாப்பிட போகிறார்கள் எனக் கூறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஆனால், உண்மையில் ரயிலில் சமோசாக்கள் விற்பனை செய்யப்படவில்லை என்பதும், தனது உணவகத்தைப் பிரபலப்படுத்துவதற்காகவே அவர் வீடியோ எடுத்துப் பதிவேற்றியதும் தெரியவந்தது.
இந்த வீடியோ வைரலான நிலையில், அவரது மார்க்கெட்டிங் உத்தியை ஒரு சிலர் பாராட்டினர். அதே சமயம் மேலும் சிலர் ஒட்டுமொத்த இந்தியாவின் மரியாதையையும் கெடுக்கும் செயலில் ஈடுபட வேண்டாம் எனப் பதிவிட்டு வருகின்றனர்.
















