ஜம்மு காஷ்மீரின் கிஷ்வார் பகுதியில் செனாப் நதியின் மீது அமைக்கப்படவுள்ள 260 மெகாவாட் துல்ஹஸ்தி இரண்டாம் கட்ட நீர்மின் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதனால், பாகிஸ்தான் நிலைகுலையும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான சிந்துநதி நீர் ஒப்பந்தம் 1960 ஆம் ஆண்டு உலகவங்கி முன்னிலையில் கையெழுத்தானது. இதன்படி, சிந்து நதி படுகையில் உள்ள 6 ஆறுகளில் ரவி, பியாஸ், சட்லஜ் ஆகிய கிழக்கு நதிகளை இந்தியா, நீர்ப்பாசனம், மின் விநியோகம் மற்றும் உள்நாட்டுப் பயன்பாட்டுக்காகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மேற்கு நதிகள் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. ஆனாலும் பாகிஸ்தானை பாதிக்காத வகையில், இந்த நதிகளின் நீரை மின் உற்பத்தி ,நீர் பாசனம் மற்றும் போக்குவரத்து ஆகிய நுகர்வு அல்லாத தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள இந்தியாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையே 3 போர்கள் நடந்த காலங்களிலும் இந்த நதி நீர் ஒப்பந்தம் தொடர்ந்துள்ளது.
2016ம் ஆண்டுப் பிரதமர் மோடி, இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கிழக்கு நதிகளில் இருந்து பாகிஸ்தானுக்குத் தண்ணீர் பாயாது என்று அறிவித்தார். 2019ம் ஆண்டு புல்வாமா பயங்கரவாத தாக்குதலையடுத்து, கிழக்கு நதியின் நீரோட்டங்களை இந்தியா முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் நீர்திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டது.
இதனை உபரி நீர் துளியும் பாகிஸ்தானுக்குச் செல்லாமல் இந்தியா பார்த்துக் கொண்டது. 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மறு பரிசீலனை செய்து சிந்தி நதி நீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்கும் விருப்பத்தை இந்தியா முறையாக அறிவித்தது. தொடர்ந்து பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா காலவரையறை இன்றி நிறுத்திவைத்தது.
ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியில் கட்டப்பட்டுள்ள பஹலிகார், சலால் ஆகிய 2 அணைகளில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டது. மேலும், காஷ்மீரின் ஜீலம் நதியில் கட்டப்பட்டுள்ள கிசன்கங்கா அணையில் இருந்தும் பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறந்துவிடுவதும் நிறுத்தப் பட்டது. சிந்து நதி படுககையில் 6 இடங்களில் புதிய அணைகளை கட்ட ஏற்கெனவே இந்தியா திட்டமிட்டு இருந்தது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக, ரட்லே, பர்சார், பகல் துல், குவார், கிரு மற்றும் கீர்த்தாய் I மற்றும் II உள்ளிட்ட நீர்மின் திட்டங்களும் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இதில் சவால்கோட் நீர்மின் திட்டத்தை மத்திய அரசு “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அறிவித்துள்ளது.
ரவி, சட்லஜ் நதிகளில் புதிய அணைகளை கட்டும் பணிகளை விரைவுபடுத்த மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில் ஏற்கெனவே இருக்கும் அணைகளின் நீர்மட்டத்தை உயர்த்தவும் மத்திய நீர் வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே கடந்த ஜூலை மாதம், செனாப் நதியில் கட்டப்படும் 1,856 மெகாவாட் சவல்கோட் நீர்மின் திட்டத்துக்காகச் சர்வதேச டெண்டர்களை மத்திய அரசின் தேசிய நீர்மின் சக்தி கழகம் (NHPC) அறிவித்தது.
தொடர்ந்து, 2007ம் ஆண்டு முதல் தேசிய நீர்மின் சக்தி கழகத்தால் வெற்றிகரமாக இயக்கப்படும் 390 மெகாவாட் துல்ஹஸ்தி நிலை-I நீர்மின் திட்டத்தின் நீட்டிப்பாகத் துல்ஹஸ்தி நிலை-II திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய திட்டத்துக்கு 3,200 கோடி ரூபாய்க்கும் மேல் செலவாகும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
புதிய திட்டத்தின் கீழ், முதல் மின் நிலையத்திலிருந்து 3,685 மீட்டர் நீளமும் 8.5 மீட்டர் விட்டமும் கொண்ட ஒரு தனி சுரங்கப்பாதை வழியாக நீர் திசைதிருப்பப்பட்டு, இரண்டாம் மின் நிலையத்தில் குதிரை லாட வடிவிலான நீர்த்தேக்கத்தில் நீர் சேமிக்கப்படும். இந்தப் புதிய நீர் மின் திட்டத்தில் இரண்டு 130 மெகாவாட் அலகுகளைக் கொண்ட ஒரு நிலத்தடி மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், இதனால் மொத்த மின் உற்பத்தித் திறனை 260 மெகாவாட்டாக அதிகரிப்பதால், ஆண்டு மின்சார உற்பத்தியையும் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்காக 60.3 ஹெக்டேர் நிலம் தேவைப்படுவதால் ஜம்மு காஷ்மீரின் கிஷ்வார் மாவட்டத்தைச் சேர்ந்த பென்ஸ்வார் மற்றும் பால்மர் ஆகிய இரண்டு கிராமங்களிலிருந்து 8.27 ஹெக்டேர் தனியார் நிலம் கையகப்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தானின் பிபிபி கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஷெர்ரி ரஹ்மான்,இது சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் விதிகளை அப்பட்டமாக மீறுகிறது,” என்றும் செனாப் நதி நீரை இந்தியா ஒரு தீவிர ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், எல்லைக்குள் நுழையும் செனாப், ஜீலம் மற்றும் நீலம் நதிகளிலிருந்து,நீர்வரத்து குறைந்துள்ளதாக குற்றம் சாட்டிய பாகிஸ்தான், இந்தியா நீரை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவதாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கும் கடிதம் எழுதியது. மேலும், சிந்து நதி நீர் ஓட்டத்தைத் தடுக்கும் எந்தவொரு செயலும் “போர்ச் செயலாக” கருதப்படும் என்றும் பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.
“பயங்கரவாதமும் வர்த்தகமும் கைகோர்த்துச் செல்ல முடியாது” என்றும் “தண்ணீரும் இரத்தமும் ஒன்றாகப் பாய முடியாது” என்றும் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை தெளிவு படுத்தியது குறிப்பிடத் தக்கது.
















