ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க தீவிரமாக இந்தியா ஈடுபட்டிருக்கும் நிலையில், ஏற்றுமதிக்குத் தயாரான தனது சுகோய்-57E ஸ்டெல்த் போர் விமானத்தை இந்தியாவுக்கு விற்கவும், இந்தியாவிலேயே தயாரிக்கவும் ரஷ்யா ஆர்வம் காட்டியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இன்றைய உலகில், ஐந்தாம் தலைமுறை போர்விமானங்கள் தயாரிப்பில் அமெரிக்காவும் ரஷ்யாவும் முன்னணியில் உள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் F-35 மற்றும் ரஷ்யாவின் சுகோய் 57 ஆகிய போர் விமானங்கள் முக்கியமானவையாக உள்ளன. கடந்த நவம்பரில் துபாயில் நடந்த ஏர் ஷோவில் ரஷ்யா ஏற்றுமதிக்கான தனது சுகோய்-57E விமானங்களை களமிறக்கியது. அந்த ஏர் ஷோவில் பேசிய ரஷ்ய அதிகாரி, தொழில்நுட்ப பரிமாற்றத்துடன் சுகோய் 57E போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா தயாராக இருப்பதாக அறிவித்தார்.
மேலும், ஐந்தாம் தலைமுறை போர் விமானமான சுகோய்57E போர் விமானத்தின் மேம்படுத்தப்பட்ட புதிய ஆயுத அமைப்புகள், நவீன தொழில்நுட்பம், அதிநவீன என்ஜின், ஸ்டெல்த் சிஸ்டம், AI தொழில்நுட்பம், பிரத்யேக ரேடார் அமைப்புகள் என அனைத்தையும் இந்தியாவுக்கு வழங்கச் சம்மதிப்பதாகவும் தெரிவித்த ரஷ்யா, குறிப்பாக இந்தியாவின் போர் தளவாடங்களையும் இந்தச் சுகோய் விமானத்தில் இணைத்துக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது.
இந்நிலையில், மீண்டும் ரஷ்யாவின் யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷனின் (OAK) தலைமைச் செயல் அதிகாரி (Vadim Badekha,) வாடிம் படேகா, விரிவான தொழில்நுட்பப் பரிமாற்றம், விமானத்தில் உள்ள அமைப்புகளுக்கான source code எனப்படும் மூலக் குறியீடுகள் மற்றும் இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான வழிமுறைகளும் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த விமானம் 40 முதல் 50 ஆண்டுகள் வரையிலான உறுதியான வடிவமைப்பு ஆயுளைக் கொண்டுள்ளது என்றும், இது பல தசாப்த கால செயல்பாட்டுச் சேவையைத் தாங்குவதோடு, நவீன வான்வழிப் போரின் வேகமாக மாறிவரும் தொழில்நுட்பச் சூழலுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆளில்லா அமைப்புகளின் குழுவை வழிநடத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு எதிர்கால “கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையமாக” Su-57 விமானம் விளங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சுகோய் 57E மட்டுமே இந்திய விமானப்படையின் நீண்ட காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரே விமானம் ஆகும் என்றும், இது ஏதோ வெறும் ஜெட் விமானங்களை வாங்குவது மட்டுமல்ல, மாறாக இந்தியாவின் எதிர்கால வான்வழிப் போர் திறனுக்காக ஒரு முழுமையான சூழல் அமைப்பை உருவாக்குவதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2060ம் ஆண்டு வரையிலும் நீடிக்கக்கூடிய விமானப்படைக்கான இந்திய விமானப்படையின் தேவையை குறிவைத்து சுகோய் 57E வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் மேம்பட்ட நடுத்தர போர் விமானம் (AMCA) இன்னும் உருவாக்கத்தில் இருப்பதாலும், பல்துறை போர் விமானம் (MRFA) டெண்டர் செயல்முறை நடந்துகொண்டிருப்பதாலும், Su-57E விமானம் இந்திய பாதுகாப்புத் துறைக்குத் தொழில்நுட்பத் தொடர்ச்சி மற்றும் இறையாண்மையை உறுதி செய்யும் உடனடியாகக் கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான தீர்வாகப் பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
“ஐந்தாம் தலைமுறை போர் விமானம்” (FGFA) திட்டத்தில், இந்தியாவுக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு இருக்கைகள் கொண்ட விமானத்தை உருவாக்குவது அடங்கியிருந்தது ஆனால் 2018-ல் இந்தியா இந்த முயற்சியிலிருந்து விலகிக்கொண்டது ஆனால் இன்றைய சுகோய் -57 E விமானம், 2010-ல் முதன்முதலில் பறந்த T-50 முன்மாதிரி விமானத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது மற்றும் மேம்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
23வது இந்தியா-ரஷ்யா ஆண்டு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வந்தபோது, சுகோய் -57E போர் விமானம் மற்றும் அடுத்த தலைமுறை S-500 வான் பாதுகாப்பு அமைப்பையும் இந்தியாவுக்கு விற்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன என்று கூறப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், இந்தியாவுக்கான ரஷ்யாவின் மொத்த ஆயுத ஏற்றுமதி 36 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இது 2010-2014 காலகட்டத்தில் 72 சதவீதமாக இருந்தது. அமெரிக்காவின் பொருளாதார தடைகள் மற்றும் சர்வதேச அழுத்தங்களுக்கு ஈடுகொடுக்க, இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதி தான் இந்தியாவுக்கான தொழில்நுட்ப பரிமாற்றத்துடன் கூடிய சுகோய் 57 E விற்பனை திட்டமாகும்.
















