சென்னை திருவல்லிக்கேணியில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயிலின் நுழைவாயில் கட்டுமானப் பணிகளை அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருவல்லிக்கேணி ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி கோயிலில் நுழைவாயில் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், திடீரென அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்தியதுடன், கட்டப்பட்டிருந்த பகுதிகளைச் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் வந்த நிலையில், மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டதாக தெரிகிறது.
திட்டமிட்டே மதக் கலவரத்தைத் தூண்டும் நோக்கில் அடையாளம் தெரியாத நபர்கள், இந்த அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர் என்று இந்து முன்னணி மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் குற்றம் சாட்டினார்.
இந்த சம்பவம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை இதுவரை எந்தப் புகாரும் அளிக்காமல் மெத்தனமாக இருப்பதாகச் சாடிய அவர், கோயில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் எனத் அவர் தெரிவித்தார்.
















