புதுச்சேரியில் திமுக- காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், இம்முறை டெபாசிட் கூட பெற மாட்டார்கள் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் பாஜக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் , திமுகவினர் வாரிசு அரசியலை ஊக்குவிப்பதாகவும் குற்றம்சாட்டினார். திமுகவினர், வட இந்தியா மற்றும் தென்னிந்தியா என பிரித்து அரசியல் செய்வதாக கூறிய அவர், வரும் சட்டமன்ற தேர்தலில், புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் குஷ்பு, தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதால் கொலை, கொள்ளை குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். தமிழகத்திற்கான நிதியுதவியை மத்திய அரசு விடுவித்து வருவதாகவும், ஆனால் தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்வதாகவும் குஷ்பு குற்றம்சாட்டினார்.
















