பேராவூரணி அருகே மருத்துவமனைக்கு செல்ல ரயில்வே கேட்டை திறக்க வலியுறுத்தி மிரட்டியவர்களை, பெண் “கேட் கீப்பர்“ சாதூரியமாக கையாண்ட வீடியோ வெளியாகியுள்ளது.
ஆலங்குடியை சேர்ந்த பெண் ஒருவர், உடல்நலக்குறைவால் திடீரென மயக்கமடைந்தார். இதனால் உறவினர்கள் அவரை இருசக்கர வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.
தஞ்சை மாவட்டம் பின்னவயல் ரயில்வே கிராசிங் வந்தபோது, அங்கு ரயில்வே கேட் மூடியிருந்தது. அப்போது அங்கு பணியில் இருந்த கேட் கீப்பரிடம், உறவினர்கள் கேட்டை உடனடியாக திறக்குமாறு கூறினர்.
ரயில் வந்து கொண்டிருப்பதால், கேட்டை திறக்க முடியாதென அவர் தெரிவித்தார். அதற்கு பெண்ணின் உறவினர்கள், கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் அவரிடம் பேசினார். அப்போது அந்த பெண் ஊழியர், வேண்டுமெனில் தனது இருசக்கர வாகனம் மூலம் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என ஆலோசனை கூறினார்
இதனையடுத்து கேட் கீப்பரின் நிலைமையை அவர்கள் புரிந்து கொண்டனர். பின்னர் அவரின் இருசக்கர வாகனம் மூலம் உயிருக்கு போராடிய பெண்ணை, உறவினர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
















