அமூர் ஃபால்கன்… 150 முதல் 200 கிராம் எடையுள்ள மிகச் சிறிய அமூர் பருந்துகள்தான் இந்த சாதனைக்கு சொந்தமானவை….
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் மூன்று அமூர் பருந்துகளை தேர்வு செய்த விஞ்ஞானிகள், அவற்றின் கண்டம் விட்டு கண்டம் செல்லும் திறனை, பாணியை கண்காணிக்க, அப்பறவைகளின் உடலில் செயற்கைக்கோள் கருவிகளை பொருத்தினர்…
அவற்றின் செயல்பாட்டை கண்டு வியந்தே போனார்கள் விஞ்ஞானிகள்…. இந்தியாவில் இருந்து 5 நாட்களில் 5000 கிலோ மீட்டர்களை கடந்து ஆப்பிரிக்காவை அடைந்திருந்தன அந்தப் பறவைகள்… அமூர் பருந்துகள் மிருகத்தனமாக சக்தியை மட்டும் பயன்படுத்தாமல், வளிமண்டல இயற்பியலை நேர்த்தியாக பயன்படுத்தி இந்த சாதனையை நிகழ்த்தியிருந்ததைக் கண்டு விஞ்ஞானிகள் வாயடைத்து போயினர்…
150 முதல் 200 கிராம் எடையுள்ள இந்தப் பறவைகள், இந்திய நிலப்பரப்பைக் கடந்து, அரபிக் கடலைக் கடந்து, ஆப்பிரிக்காவின் குளிர்கால நிலங்களில் கால் பதித்துள்ளன…
செயற்கைக்கோள் தரவுகளின்படி, இந்தியாவிலிருந்து புறப்படும் அமுர் பருந்துகள் ஒரு வாரத்திற்குள் ஐந்தாயிரம் முதல் 6000 கிலோ மீட்டர்களை கடந்து கிழக்கு ஆப்பிரிக்காவை அடைவது வழக்கமாக வைத்திருக்கின்றன… பெரும்பாலும் அரேபிய கடல் மற்றும் மேற்கு இந்தியப் பெருங்கடலில் நீண்ட இடைவிடாத கடல் பயணங்களை மேற்கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆப்பிரிக்காவில் குளிர்காலத்தைக் கழிக்கும் அமூர் பருந்துகள், குளிர்காலத்தின் பிற்பகுதியிலும், வசந்த காலத்தின் துவக்கத்திலும் மீண்டும் வடக்கு நோக்கி நகர்ந்து, சீனா, ரஷ்யா உட்பட வடகிழக்கு ஆசியாவில் இனப்பெருக்கம் செய்யும் பகுதிகளை ஒவ்வொரு ஆண்டும் மே, ஜூன் மாதங்களில் அடைவது தெரியவந்துள்ளது.
மேலும் பருவமழை காற்றும், அரேபியக் கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் காணப்படும் வலுவான காற்று அமைப்பும் அமூர் பருந்துகளின் பயணத்தை எளிதாக்கும் இயற்பியலின் தன்மையை எடுத்துரைக்கின்றன… இது பறவைகளின் ஆற்றல் செலவிடப்படுவதை குறைத்து, நிலையான உந்துசக்தியாக விளங்குகின்றன…
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு, X தளத்தில் இந்தத் தகவலைப் பகிர்ந்ததன் மூலம் ஃபால்கனின் அசாத்திய திறமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது… இது குறித்த ஆய்வுகள் தொடரும் நிலையில், ஒவ்வொரு முடிவும் விஞ்ஞானிகளின் புலப்படாத கேள்விகளுக்கும் விடையளிக்கலாம் என்றே கூறலாம்…
















