ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க ஆன்லைன் டோக்கன் பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் என திண்டுக்கல் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் வலியுறுத்தியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பில்லமநாயக்கன்பட்டி, புகழைப்பட்டி பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டு போட்டிக்காக தங்களது வருமானத்தில் நாள்தோறும் 300 ரூபாய் வரை காளைகளின் உணவுக்கு செலவு செய்வதாக காளை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால், ஜல்லிக்கட்டு போட்டியில் தங்களது காளைகள் களமாட வாய்ப்பு கிடைப்பதில்லை என்று கூறும் அவர்கள், ஆன்லைனில் பதிவு செய்தும் டோக்கன் மறுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஆன்லைன் டோக்கன் பதிவு முறை ரத்து செய்துவிட்டு நேரடி டோக்கன் வழங்கும் முறையை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















