நடப்பாண்டு 19 போர்க் கப்பல்களை, கடற்படை சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக இந்திய கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பில் அதிகரித்து வரும் சவால்களை கருத்தில் கொண்டு, இந்திய கடற்படையின் பலத்தை விரிவுபடுத்தும் பணியில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அதன்படி இந்தியாவின் பாதுகாப்புத் திறனை உலகிற்கு பறைசாற்றும் வகையில், 3,500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் கே-4 பாலிஸ்டிக் ஏவுகணைகள் சமீபத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன.
அந்த வரிசையில் நடப்பாண்டு 19 போர்க் கப்பல்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இந்திய கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கடற்படை தரப்பு, 2026 ஆம் ஆண்டு கடற்படை விரிவாக்கத்தின் உச்சக்கட்டமாக இருக்கும் என கூறியுள்ளது.
இதனால் வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு கடற்படை கப்பல்கள் உற்பத்தி வேகம் உயர்ந்துள்ளதாகவும், உள்நாட்டு கப்பல் கட்டும் சுற்றுச்சூழல் அமைப்பின் முதிர்ச்சியை நிரூபித்து உள்ளதாகவும் பாதுகாப்பு துறை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
முன்பு ஒரு கடற்படை கப்பலை உருவாக்க 8 முதல் 9 ஆண்டுகள் தேவைப்பட்டது. இந்த சூழலில் தற்போது மத்திய அரசின் நடவடிக்கையால் 6 ஆண்டுகளிலேயே ஒரு கடற்படை கப்பல் உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
















