முருகன் பக்தர் என்று சொல்லி கொள்வதில் பெருமையாக உள்ளது என்றும், வருடந்தோறும் முருகனின் அறுபடை வீட்டிற்கு சென்று வருவதாகவும் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்
சென்னை வடபழனியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 108 வேல் போற்றியை குறிக்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட 108 வேல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், A2B உரிமையாளர் ஶ்ரீனிவாச ராஜா, தங்கம் – வைரம் நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி, தமிழ்நாடு முன்னாள் கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி ஜவகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், முருகன் பக்தர் என்பதால் தனது பல்கலைக்கழகத்திற்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் என்று பெயர் வைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையில் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு சென்று வருவதாக ஐசரி கணேஷ் கூறினார்.
முன்னதாக பேசிய தங்கம் – வைரம் நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி, வேல் என்பது சர்ச்சைக்குரிய பொருளாக இருந்தாலும், வேல்தான் கடைசியாக நிற்கும் என தெரிவித்தார்.
















