கொல்கத்தாவில் I-PAC நிறுவனம் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகள் மற்றும் அதில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நேரடி தலையீடு குறித்த பரஸ்பர குற்றச்சாட்டுகள், மேற்கு வங்க அரசியலில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்…
கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஐ-பேக் (I-PAC) என்ற அரசியல் ஆலோசனை நிறுவனம் தொடர்புடைய இடங்களில், அண்மையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
மேற்கு வங்க நிலக்கரி கடத்தல் மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கின் ஒரு பகுதியாக நடந்த இந்த சோதனைகள், மேற்கு வங்க அரசியலில் கடும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன.
பல கோடி ரூபாய் அளவிலான பணப்பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்தும் நோக்கில், ஐ-பேக் நிறுவனத்தின் அலுவலகம், அதன் இணை நிறுவனர் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் ஐடி பிரிவு தலைவர் பிரதீக் ஜெயின் வீடு உள்ளிட்ட இடங்களில், மத்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனைகள் நடந்துகொண்டிருந்தபோது முதலமைச்சர் மம்தா பானர்ஜி திடீரென பிரதீப் ஜெயின் வீட்டிற்கு சென்றது இந்த விவகாரத்தை கூடுதல் பரபரப்பாக்கியது.
சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் வரை அங்கிருந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அங்கிருந்து பச்சை நிற கோப்புடன் வெளியே வந்த காட்சிகள் அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதங்களை ஏற்படுத்தின. அதன் தொடர்ச்சியாக சால்ட் லேக் செக்டார்-5-ல் உள்ள ஐ-பேக் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு மம்தா நேரில் சென்றார்.
இதனால் அங்கு மாநில காவல்துறை உயரதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் டிஎம்சி கட்சி தலைவர்கள் குவிந்திருந்தனர். மத்திய படைகள் கட்டடத்தை சீல் செய்திருந்த நிலையில், முதலமைச்சர் மம்தா அவற்றை மீறி அலுவலகத்திற்குள் சென்று சோதனையில் ஈடுபட்டிருந்த அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் நீண்ட வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
குறிப்பாக அமலாக்கத்துறையின் சோதனைகள் அனைத்தும் முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது எனவும், 2026 சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து டிஎம்சி-யின் வேட்பாளர் பட்டியல், தேர்தல் உத்தி மற்றும் முக்கிய தரவுகளை கைப்பற்ற முயற்சி நடப்பதாகவும் மம்தா குற்றம் சாட்டினார்.
அத்துடன் இது ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் என குறிப்பிட்டார். தொடர்ந்து அமலாக்கத்துறை சோதனைகளை கண்டிக்கும் வகையில் ஐ-பேக் அலுவலகம் முன்பு அமர்ந்து அவர் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். அத்துடன் இந்த விவகாரத்தை குறிப்பிட்டு பெரும் போராட்ட பேரணியை டிஎம்சி கட்சி அறிவித்துள்ளது.
இதற்கிடையே, இது தொடர்பாக விளக்கமளித்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், எந்த அரசியல் கட்சியையும் குறிவைக்கும் நோக்கில் இந்த சோதனைகள் நடத்தப்படவில்லை எனவும், சட்டப்படி நடைபெற்று வரும் விசாரணையின் ஒருபகுதியாகவே இவை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
அத்துடன் சோதனைகளின்போது முதலமைச்சர் மம்தா பேனர்ஜி மற்றும் மாநில காவல்துறை உயரதிகாரிகள் இணைந்து, ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், இது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் நடைபெறும் விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகவும், இது தொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், அரசியல் காரணங்களுக்காக அமலாக்கத்துறையினர் தங்களை குறிவைத்து சோதனைகள் நடத்துவதாகக் கூறி, ஐ-பேக் நிறுவனமும் இடைக்கால தடை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
முந்தைய அமலாக்கத்துறை விசாரணை விவரங்களின்படி, 2020-ம் ஆண்டு சிபிஐ பதிவு செய்த நிலக்கரி கடத்தல் வழக்கிலிருந்தே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அனுப் மாஜி தலைமையிலான கும்பல், நிலக்கரி நிறுவனத்தின் சுரங்கங்களில் இருந்து சட்டவிரோதமாக நிலக்கரி எடுத்து, அதில் கிடைத்த பணத்தை ஹவாலா வழியாக பரிமாற்றம் செய்ததாகவும், அந்த பணத்தில் ஒரு பகுதி ஐ-பேக் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அந்த தொகை, கடந்த 2022-ம் ஆண்டு நடந்த கோவா சட்டமன்றத் தேர்தலில், டிஎம்சி கட்சிக்கான அரசியல் ஆலோசனை சேவைக்காக வழங்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், மத்திய விசாரணை அமைப்பின் பணியில் முதலமைச்சர் நேரடியாக தலையிட்டுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. மேலும், மம்தா பானர்ஜிக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
நடப்பாண்டு மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஐ-பேக் நிறுவனம் – அமலாக்கத்துறை விவகாரம் மேற்கு வங்க அரசியலில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
















