பொங்கல் திருநாளுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்ட உள்ளன. குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தில் காளைகளுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து தயார்படுத்தி வரும் உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளனர். அதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்……
பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகளில் பங்கேற்கும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள், காளைகளை தயார்படுத்தி வருகின்றனர். குறிப்பாக நாலுகோட்டை பகுதியில் ஏராளமான இளைஞர்கள் காளைகள் வளர்த்து வருவதுடன் அவற்றுக்கு தினமும் வித்தியாசமான பயிற்சிகளும் அளித்து வருகின்றனர்.
புகழ், சிலம்பு, சிங்கம், அப்புக்குட்டி, சச்சின், காளிமுனி, அழகர், புருசுலி, சின்னத்தம்பி, அன்பு, கருப்பன் இவையெல்லாம் ஏதோ குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் அல்ல. இவை அனைத்தும் இளைஞர்களால் வளர்க்கப்படும் காளைகளுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்கள்.
அதிகாலையிலேயே காளைகளுக்கான பயிற்சிகள் தொடங்கி விடுகின்றன. காளைகள் நீண்ட நேரம் நின்று விளையாடும் வகையில் நேராக நிற்கும் விதமாக சுமார் 30 நிமிடங்களுக்கு தலையை தூக்கி கட்டி வைக்கின்றனர். அந்த பயிற்சி முடிந்தவுடன் உடல் வலிமைக்காக பச்சை முட்டையை காளைகளுக்கு கொடுக்கின்றனர். கால்கள் வலுப்பெற 40 நிமிடங்கள் சாலைகளில் காளைகளுக்கு ஓட்டப் பயிற்சி.
அது முடிந்ததும் கண்மாயில் இறக்கி 20 நிமிடங்களுக்கு நீச்சல் பயிற்சி… இதனை அடுத்து நீண்ட நேரம் தாக்குப் பிடித்து விளையாட தலைசுருளி வேர் காய்ச்சி காளைகளுக்கு சாறு கொடுக்கின்றனர். ஒருநாள் இடைவெளி விட்டு உழவு பணி மேற்கொண்டு காளைகளின் கால்களை மேலும் வலிமையாக்குகின்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்கு முன்னர் சுமார் 30 நாட்களுக்கு பருத்திவிதை, துவரம் தூசி, பேரிச்சம்பழம் என சத்தான உணவுகளை காளைகளுக்கு வழங்குகின்றனர்.
இளைஞர்களும் காளைகளுடன் சேர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர். பட்டதாரி இளைஞர்களும் காளைகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டிவரும் சூழலில் தங்களுக்கு சமூகம் உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனர்.
காளைகளை வளர்க்க மாதம்தோறும் சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது என்று தெரிவிக்கும் உரிமையாளர்கள், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகளுக்கு டாடா ஏஸ் வாகனங்களில் காளைகளை அழைத்து செல்லும் போது காவல்துறையினர் மறித்து 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆன்லைன் முறையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு டோக்கன் வழங்குவதால் முந்துபவர்களை தவிர மற்றவர்கள் பங்கேற்க முடியாத சூழல் ஏற்படுவதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதனையும் மாற்றி நேரடியாக டோக்கன் வழங்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும் எனவும் காளைகளின் உரிமையாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர். மேலும் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்துபவர்கள் ஒரு குறிப்பிட்ட காளைகளை மட்டுமே அழைப்பதை தவிர்த்து அனைத்து காளைகளையும் களம் இறக்க அனுமதி அளிக்க முன் வர வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
பொங்கல் திருநாளையொட்டி அனைவரும் எதிர்பார்க்கும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகளில் காளைகள் சீறிப் பாய தயாராகி வருகின்றன. அதேசமயம் காளைகளை வளர்த்து பயிற்சியளிக்கும் தமது கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதே உரிமையாளர்களின் குரலாக ஒலிக்கிறது.
















