சாலை விபத்துகளில் காயமடைபவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டத்தை, விரைவில் நாடு முழுவதும் பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைப்பார் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களின் போக்குவரத்து அமைச்சர்களின் வருடாந்திர கூட்டம், நிதின் கட்கரி தலைமையில் நடைபெற்றது. அதில், சாலை பாதுகாப்பு, பயணிகளுக்கான வசதிகள் ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிதின் கட்கரி, சாலை விபத்துகளில் காயமடைபவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டத்தை நாடு முழுவதும் விரைவில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளதாக தெரிவித்தார்.
இதன்மூலம் சாலை விபத்துகளில் காயமடைபவர்களில் நபர் ஒருவருக்கு அதிகபட்சம் 7 நாட்களுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமில்லா சிகிச்சை அளிக்க முடியும் என்றார்.
கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 14-ந் தேதி, சண்டிகரில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தால் பரிசோதனை அடிப்படையில் இத்திட்டம் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
















