தமிழக சட்டப்பேரவை தேர்தலை, வரும் ஏப்ரல் 10ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கு, கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில், திமுக, அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது. அதன் பதவி காலம், வரும் மே 10ம் தேதி நிறைவடைய உள்ளது.
அதேபோல், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கத்திலும், அம்மாநில அரசுகளின் பதவி காலம் நிறைவடைய உள்ளது. எனவே, ஐந்து மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை, தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.
இதனிடையே, அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலை விரைவாக நடத்த, தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அடுத்த மாதம் ஆலோசனை நடத்திய பின், அம்மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
















