காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான மூன்று யானைகளை, திருச்சி எம்.ஆர்.பாளையம் காப்பகத்தில் இருந்து விடுவித்து, பீடம் நிர்வாகத்திடம் வழங்கும்படி, வனத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் காமகோடி பீடத்தில் வழிபாட்டு நடைமுறைகளுக்காக சட்டத்துக்கு உட்பட்டு மூன்று யானைகள் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த யானைகளை கவனித்து வந்த பாகன், கடந்த 2015ல் காலமானதால், 3 யானைகளும் திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் உள்ள காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து, யானைகளை பராமரிக்க தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், காஞ்சிபுரம் கோனேரிக்குப்பம் யானைகள் மையத்துக்கு அனுப்பக் கோரியும் காமகோடி பீடம் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கோனோரிக்குப்பம் யானைகள் மையத்தை நிபுணர் குழு ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் 3 யானைகளையும் காஞ்சி காமகோடி பீடத்திடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
















