ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வழி மாறி செல்லும் காளைகளை கண்டுபிடிக்க அதன் உரிமையாளர்கள் சிரமப்படுகின்றனர். ஆனால் அதிநவீன ஜிபிஎஸ் தொழில்நுட்ப உதவியுடன், ஜல்லிக்கட்டு காளைகளின் இருப்பிடத்தை கண்டறியும் முறையை ஒருவர் அறிமுகப்படுத்தியுள்ளார். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்
பாரம்பரியமும் கலாச்சாரமும் நிறைந்த ஜல்லிக்கட்டு போட்டி தமிழர்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ளது.
ஜல்லிக்கட்டு காளைகளைத் தங்களது வீட்டில் ஒரு பிள்ளையாகக் கருதி வளர்த்து வரும் உரிமையாளர்கள் , மதுரை மாவட்டம் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கும் காளைகளை அழைத்துச் சென்று பங்கேற்கச் செய்கின்றனர். இப்படி ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளைப் பங்கேற்க செய்வதற்காக அதன் உரிமையாளர்கள் வாகனங்களில் 10 முதல் 20 நபர்களை உடன் அழைத்துச் செல்வார்கள். ஏனென்றால் ஜல்லிகட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் வாடி வாசலிலிருந்து வெளியே வந்தவுடன் அந்த ஆக்ரோஷத்தில் யாரும் அதன் அருகே நெருங்க முடியாத அளவிற்கு வேகமாக ஓடும். அப்போது உரிமையாளர்கள் அழைத்துச் சென்ற நபர்கள் அந்தக் காளைகளைப் பின்னே துரத்திச் சென்று கயிறுகள் உதவியுடன் பிடித்து வீட்டிற்கு திரும்ப அழைத்து வருவார்கள்.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வழி மாறிச் செல்லும் காளைகளைப் பின் தொடராமல் விட்டால் ஏதாவது ஒரு திசை நோக்கிச் சென்றுவிடும். அவற்றைக் கண்டுபிடிக்க உரிமையாளர்கள் மிகுந்த சிரமங்களைச் சந்திக்க நேரிடும். காளைகளைக் கண்டறிந்து வீட்டிற்கு அழைத்து வர மூன்று முதல் பத்து நாட்கள்வரை ஆகும். அதுவரை காளைகளின் உரிமையாளர்களும் வீட்டுக்குச் செல்லாமல் அவற்றைத் தேடிக் கொண்டிருப்பார்கள். இதனால் பத்தாயிரம் முதல் முப்பதாயிரம் வரை கூடச் செலவுகள் ஆகும் என்கிறார்கள் காளைகளின் உரிமையாளர்கள்…
காளைகளைப் போட்டிகளில் பங்கேற்க வாகனங்களில் அழைத்துச் செல்வதால் அந்தப் பாதைகளைக் காளைகள் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டு வழி தவறி செல்வதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் GPS தொழில்நுட்பத்தை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் தனது காளைகளுக்கும் பயன்படுத்தி புதுமையைப் புகுத்தி இருக்கிறார் மதுரை வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த வினோத் ராஜ். மாநகர காவல் துறையில் தலைமை காவலராகப் பணியாற்றும் வினோத் ராஜ் , கபாலி என்ற கபாலீஸ்வரர், பாயும் புலி, ஜெட்லி, புருஷாலி, ஜூனியர் ஜெட்லீ, ராமு குட்டி, ரெம்போ, புலி கேசி உள்ளிட்ட 11 காளைகளை வளர்த்து வருகின்றார். தற்போது ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு ஜிபிஎஸ் ட்ராக்கர் கருவியைப் பயன்படுத்தி வருவது காளைகளை எளிதில் கண்டறிய உதவியாக இருப்பதாகக் கூறுகிறார் வினோத் ராஜ்.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை பங்கேற்கச் செய்வதோடு, அதிநவீன தொழில்நுட்பமான ஜிபிஎஸ் ட்ராக்கர் உதவியுடன் அவற்றை கண்டறியும் வினோத் ராஜின் செயல் வரவேற்பை பெற்றுள்ளது.
















