ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் கிரீன்லாந்தை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். இதனிடையே சமீபத்தில் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்க படைகள் கைது செய்தன. பின்னரே வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை அபகரிப்பதே டிரம்ப்பின் திட்டம் என தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கிரீன்லாந்தின் கனிமவளங்கள் மீது குறிவைத்துள்ள டிரம்ப், தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி டென்மார்க்கிடம் இருந்து அந்த தீவை கைப்பற்ற முடிவு செய்துள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள டென்மார்க் அரசு, நேட்டோ கூட்டமைப்பு உடைந்து சிதறும் என எச்சரித்தது.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், கிரீன்லாந்து விஷயத்தில் அவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நாங்கள் ஏதேனும் செய்யப்போகிறோம் என கூறினார்.
அமெரிக்கா அதை செய்யாவிட்டால், ரஷ்யாவோ அல்லது சீனாவோ கிரீன்லாந்தை கைப்பற்றிவிடும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், ரஷ்யாவையோ, சீனாவையோ அண்டை நாடாக கொண்டிருக்க அமெரிக்கா விரும்பவில்லை எனவும் டிரம்ப் கூறினார்.
















