சென்னையை சேர்ந்த நபரிடம் 70 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை கோயம்பேட்டை சேர்ந்த ஆனந்த் குமார், தனது தொழிலை விரிவுபடுத்துவதற்காக 35 கோடி ரூபாய் கடன் பெற முயன்றார்.
அப்போது, அவரை தொடர்புகொண்ட ஹரி என்ற நபர், கடன் பெற்றுத் தருவதாக உறுதியளித்ததுடன், அதற்காக 70 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதை நம்பிய ஆனந்த் குமார், ஹரியின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியுள்ளார். பின்னர், ஹரி கொடுத்த படிவங்களை வங்கியில் சமர்ப்பித்தபோது அவை போலி என தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவினர், ஹரி உட்பட இருவரை கைது செய்தனர்.
















