பிஎஸ்எல்வி சி62 ராக்கெட் தனது இலக்கை அடையவில்லை என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி62 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இந்த புத்தாண்டில் இஸ்ரோ ஏவிய முதல் ராக்கெட்டாகும். மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கிய இ.ஓ.எஸ். என்-1 என்ற செயற்கைக்கோள் முதன்மை செயற்கைக்கோளாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இதனுடன் மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 வணிக செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டன.
இதனிடையே, விண்ணில் செலுத்தப்பட்ட சற்று நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்தது என்றும், இதனால், திட்டம் இலக்கை அடையவில்லை எனவும் இஸ்ரோ தெரிவித்தது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், பிஎஸ்எல்வி ராக்கெட் நான்கு நிலைகள் கொண்டது என்றும், அவற்றில் 2 நிலைகள் திட எரிபொருளையும், அடுத்த 2 நிலைகள் திரவ எரிபொருளையும் கொண்டவை என தெரிவித்தார்.
மூன்றாம் நிலையின் நிறைவு நேரம் வரை ராக்கெட் நன்றாகவே சென்றதாக கூறிய அவர், மூன்றாம் நிலை முடிவுக்கு வரும்போது தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது என கூறினார்.
இதனை தொடர்ந்து, பிஎஸ்எல்வி திட்டமிட்ட பாதையில் இருந்து விலகியது என்றும், திட்டம் இலக்கை அடையவில்லை எனவும் தெரிவித்தார். மேலும், தரவுகளை ஆராய்ந்து வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.
















