கைத்தறி நெசவுத் தொழிலில் புதுமையை புகுத்தி சாதனை படைத்து வரும் சேலம் இளைஞர்களுக்கு குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள, குடியரசு தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
சேலம் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமமான தேவூர் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகளான பிரேம் செல்வராஜ், அசோக் ஜெகதீசன் ஆகியோர் அப்பகுதியின் அடையாளமாக மாறி வருகின்றனர்.
இயந்திரவியலில் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள இருவரும் கைத்தறி நெசவு தொழிலை மேம்படுத்திட முடிவு செய்தனர். அதன்படி, இருவரும் யோகா மேட் செய்து உலகம் முழுக்க வர்த்தகம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சுய தொழிலில் உயர்வடைந்து தொழில் முனைவோராக மாறியுள்ள இருவரையும் டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் பங்கேற்க முர்மு அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பிதழை சங்ககிரி உட்கோட்ட அஞ்சலக ஆய்வாளர் நவீன்குமார் உள்ளிட்டோர் இளைஞர்களிடம் வழங்கினர்.
வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்களின் கைத்திறனில் உருவாகியுள்ள அழைப்பிதழை இருவரின் குடும்பத்தினரும் கண்டு மகிழ்ந்தனர்.
















